செயின்ட் லுசிகா: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டுவென்டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றிப் பெற்றது. வாட்சன், மைக்கேல் ஹஸ்ஸி ஆகியோர் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 2 போட்டிகள் கொண்ட டுவென்டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டுவென்டி20 போட்டி நேற்று செயின்ட் லுசியா மைதானத்தில் நடைப்பெற்றது.
போட்டியின் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. துவக்க வீரர்கள் சார்லஸ்(24), ஸ்மித்(10) ஆகியோர் விரைவாக வெளியேறினர். பின்னர் வந்த போலார்ட் 26 பந்துகளில் 5 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 54 ரன்களை குவித்தார். 20 ஓவர்களின் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை குவித்தது.
இந்த நிலையில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு துவக்க வீரர் வார்னர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஷான் வாட்சன், மைக் ஹஸ்ஸி ஜோடி பொறுப்புடன் ஆடினர். அதிரடியாக ஆடிய வாட்சன் 43 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரிகளும் அடித்து 69 ரன்களில் அவுட்டானார்.
இறுதி வரை அவுட்டாகாமல் இருந்த மைக் ஹஸ்ஸி 59 ரன்கள் எடுத்திருந்தார். அவருக்கு பெய்லி(21) உறுதி துணையாக இருந்தார். 18.1 ஓவரில் 2 விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலியா 153 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது.
இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டுவென்டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது. வரும் 30ம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான 2வது டுவென்டி20 போட்டி பிரிட்ஜ் டவுனில் நடைபெற உள்ளது.
-DINAVIDIYAL!