பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) சார்பில் தேசிய விரிவுரையாளர் தகுதித் தேர்வு சென்னை உள்பட நாடு முழுவதும் இன்று (டிசம்பர் 30) நடைபெறுகிறது.
மொத்தம் 77 மையங்களில் நடைபெறும் இந்தத் தேர்வை 7.8 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்தத் தேர்வில் விரிவுரையாளர் தகுதி பெற புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் 10 தேர்வு மையங்களில் 12,500 பேர் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.
முதல் தாள் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், இரண்டாம் தாள் காலை 10.45 மணி முதல் 12 மணி வரையிலும், மூன்றாம் தாள் பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் நடைபெறும்.
முதல் தாளில் 60 கேள்விகளும் (100 மதிப்பெண்), இரண்டாம் தாளில் 50 கேள்விகளும் (100 மதிப்பெண்), மூன்றாம் தாளில் 75 கேள்விகளும் (150 மதிப்பெண்) இடம்பெறும். முதல் தாளில் 50 கேள்விகளுக்கும், மீதமுள்ள 2 தாள்களில் அனைத்து கேள்விகளுக்கும் கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மதிப்பெண்ணும், இதர பிற்படுத்தப்பட்டவர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 35 சதவீத மதிப்பெண்ணும் தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மூன்றாம் தாளுக்கு மட்டும் 75 (50 சதவீதம்) தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணாக 68 மதிப்பெண்ணும் (45 சதவீதம்), எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 60 மதிப்பெண்ணும் (40 சதவீதம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகள்: இந்தத் தேர்வில் விரிவுரையாளராகத் தகுதிபெற புதிய விதிமுறைகளையும் பல்கலைக்கழக மானியக் குழு அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு பாடவாரியாக தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.
அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து முதல் 15 சதவீதம் பேர் மட்டுமே விரிவுயுரையாளர் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
இளம் ஆராய்ச்சியாளருக்கான உதவித் தொகை வழங்க இவர்களிலிருந்து தனியான தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
கடந்த தேர்வில் தேர்ச்சி விதிமுறைகளை மாற்றியதைத் தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, புதிய விதிமுறைகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன.-DINAVIDIYAL!