சுனாமி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா பகுதியை சுத்தப்படுத்தும் பணி முன் எப்போதும் இல்லாத சவாலான பணி என ஜப்பான் புதிய பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார்.
பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு ஃபுகுஷிமா பகுதியில் சனிக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்ட அபே இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறியதாவது:
""கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட பூகம்பத்துக்குப் பிறகு ஏற்பட்ட சுனாமி காரணமாக, ஃபுகுஷிமாவில் உள்ள அணு உலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி கதிர் வீச்சு பரவியது. இந்நிலையில், அதைச் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இது மனித வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத சவாலான பணி. இதில் வெற்றி பெற்றுவிட்டால் ஜப்பான் மற்றும் ஃபுகுஷிமா மறுநிர்மானம் சாத்தியமாகும்'' என்றார்.
ஃபுகுஷிமா அணு உலை பாதிப்புக்குப் பிறகு, பாதுகாப்பு ஆய்வுக்காக நாட்டில் உள்ள 50 அணு உலைகளும் தாற்காலிகமாக மூடப்பட்டன. பின்னர், அடுத்த 30 ஆண்டுகளில் அணு உலைகளை படிப்படியாக நிரந்தரமாக மூடுவது எனவும் முந்தைய அரசு அறிவித்தது.
இந்நிலையில், புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள அபே, அணு உலைகளை மூடுவது தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்யப்போவதாக அறிவித்துள்ளார். அதேநேரம், பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே அணு உலைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முற்போக்கு ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றது. இக்கட்சியைச் சேர்ந்த அபே புதிய பிரதமராக 26ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது நினைவுகூரத்தக்கது.-DINAVIDIYAL!