HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Wednesday, 28 March 2012

அன்னா ஹசாரே குழுவினருக்கு லோக்சபா கடும் கண்டனம் : ஜனநாயகத்தின் புனிதத்தை குலைப்பதாக விமர்சனம்

புதுடில்லி :பார்லிமென்ட் உறுப்பினர்களைப் பற்றி, தரக்குறைவாகப் பேசிவரும், அன்னா ஹசாரே குழுவினருக்கு லோக்சபா கண்டனம் தெரிவித்துள்ளது.

"பார்லிமென்டில் உள்ளவர்கள் பெரும்பாலோர், கொலை, கொள்ளைக்காரர்கள்' என, சமீபத்தில் அன்னா ஹசாரே குழுவினர் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, அமைச்சர்கள் மீதும் பல்வேறு புகார்களை கூறி வருகின்றனர். இதற்கு லோக்சபாவில் நேற்று அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கண்டன தீர்மானத்தை கொண்டு வந்த ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் குறிப்பிடுகையில், ""ஹசாரே குழுவினர், பார்லிமென்ட் உறுப்பினர்களைத் தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். ஜனநாயகத்தின் புனிதத்தைக் குலைக்கும் வகையில் பேசிவரும் அவர்களைத் தண்டிக்க வேண்டும்,'' என்றார்.

""நம் நாட்டின் உயர் அதிகாரம் படைத்தது பார்லிமென்ட். இதன் உறுப்பினர்களை விமர்சிக்கும் ஹசாரே குழுவினர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,'' என, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் கூறினார்.

இதே கருத்தை வற்புறுத்திய அ.தி.மு.க.,உறுப்பினர் தம்பிதுரை, ""உயரதிகாரம் படைத்த பார்லிமென்ட்டுக்கு எதிரான கருத்தை தெரிவிப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்,'' என்றார்.

சரத் யாதவ் கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்திற்கு பதிலளித்து, சபாநாயகர் மீரா குமார் பேசுகையில், ""பார்லிமென்ட்டின் கவுரவத்தை குலைக்கும் வகையில் பேசுவதை ஏற்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் ஏராளமான நிபந்தனையின் பேரில், தேர்தலில் போட்டியிட்டு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட பின் தான், லோக்சபா உறுப்பினராகின்றனர். எனவே, இவர்களைப் பழிப்பது மக்களைப் பழிப்பதற்கு ஒப்பாகும்,'' என்றார்.

மன்னிப்பு கேட்க வற்புறுத்தல் : ""என் புகழை குலைக்கும் நோக்கில் புகார் கூறியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்,'' என, மத்திய அமைச்சர் வீர்பத்ரசிங் தெரிவித்துள்ளார்.

"லோக்பால் சட்டமாக்கப்பட்டிருந்தால், இந்த நேரத்தில் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வீர்பத்ர சிங் உள்ளிட்ட 14 பேர் மீது எப்.ஐ.ஆர்.,பதிவு செய்யப்பட்டிருக்கும்' என, காந்தியவாதி அன்னா ஹசாரேவின் குழுவில் உள்ள அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

இது குறித்து, மத்திய சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் வீர்பத்ரசிங் குறிப்பிடுகையில், ""அர்விந்த் கெஜ்ரிவால் என் மீது கூறியுள்ள புகார் அடிப்படையற்றது. நான் ஐ.ஏ.எஸ்.,அதிகாரியிடம் லஞ்சம் பெற்றது படம் பிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறுவது முட்டாள் தனமானது. நான் லஞ்சம் பெற்றது தொடர்பான படத்தைக் காட்டினால், நீங்கள் கோரும் தண்டனையை சந்திக்கத் தயாராக உள்ளேன். என் புகழைக் குலைக்கும் நோக்கில், நீங்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், உங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்,'' என்றார்.

மக்கள் தான் எஜமானர்கள் :

அன்னா ஹசாரே தனது சமூக வலை தளத்தில் கூறியிருப்பதாவது:பார்லிமென்ட், சட்டத்தை இயற்றுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், லோக்பால் மசோதா பார்லிமென்ட்டில் எட்டு முறை தாக்கல் செய்யப்பட்டும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு யார் பொறுப்பு? மக்கள் தான் நாட்டின் எஜமானர்கள். அவர்கள் தங்களுக்கு சேவையாற்றத்தான் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து, பார்லிமென்ட்டுக்கு அனுப்புகிறார்கள். வேலை செய்ய அனுப்பப்பட்ட நபர், லோக்பால் மசோதாவை சட்டமாக்கவில்லையென்றால், எஜமானராகிய மக்களுக்கு வேலைக்காரனைத் தட்டிக் கேட்கும் உரிமை உண்டு. அதிகாரிகளும், எம்.பி.,க்களும் மக்களின் சேவகர்கள். "நீங்கள் யார் எங்களை கேள்வி கேட்பதற்கு?' என்ற மனோநிலையே அரசிலமைப்பை அவமதிப்பதாகும். ஜனநாயக நாட்டில் சட்டம் இயற்ற அனுபவம் வாய்ந்த நபர்களை தேர்ந்தெடுத்து பார்லிமென்ட்டுக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு ஹசாரே கூறியுள்ளார்.

-DINAVIDIYAL!