புதுடில்லி: 2 ஜி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து கேள்வி கேட்க ஜனாதிபதி மூலம் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த கேள்வியில் 2 ஜி ஏலம் செய்ய கால அவகாசம், மீண்டும் ஏலம் விடுவதற்கான கால நிர்ணயம் குறித்து கேள்வி எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டுக்கு பல ஆயிரம் கோடிகளை இழப்பை ஏற்படுத்தியது ஸ்பெக்ட்ரம் ஏலம். இந்த ஏலம் தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து பதவியை இழந்ததுடன் மத்திய அமைச்சராக இருந்த ராஜா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விசாரணை சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதற்கிடையில் இந்த ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டதில் முறைகேடு நடந்திருப்தால் ஸ்பெக்ட்ரம் உரிமத்தை கோர்ட் ரத்து செய்தது. இது மத்திய அரசுக்கு பெரும் தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தியது. மேலும் 120 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் பாதிக்கப்பட்டன. இந்த கம்பெனிகள் மற்றும் மத்திய அரசு சார்பில் ஏலம் ரத்து செய்தததை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு சுப்ரீம் கோர்ட்டில் பரிகாரம் கிடைக்கவில்லை.
இதனையடுத்து நாட்டின் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஜனாதிபதி மூலம் கோர்ட்டை அணுகிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான விவகார ஆவணத்தில் ஜனாதிபதி இன்று கையொப்பமிட்டுள்ளார்.
இந்த மனுவின்படி சுப்ரீம் கோர்ட்டில் கேட்கப்படவிருக்கும் கேள்விகள் விவரம் வருமாறு:
குறிப்பாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற விதிப்படி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலம் இதற்கு முன்பாகவும் இதே கொள்கை பின்பற்றப்பட்டுள்ளதே எனவே தற்போது கோர்ட் எடுக்கும் நடவடிக்கை சரிதானா? ஏலத்தில் விட வேண்டும் என்று கோர்ட் கூறுவது போல் இயற்கை வளங்களான நிலக்கரி மற்றும் தண்ணீருக்கும் பொருந்துமா? மீண்டும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் விட 4 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசம் போதுமானது இல்லை. குறைந்த பட்சம் ஒரு ஆண்டாவது தேவைப்படும். இது போன்ற கேள்விகள் மூலம் மத்திய அரசுக்கு கோர்ட் கொடுத்து வரும் நெருக்கடியில் இருந்து மீள முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.
இது போன்று ஜனாதிபதி மூலம் சுப்ரீம் கோர்ட்டை அணுகும் முறை வரலாற்றில் எப்போதாவது தான் நடக்கும் இந்த முறை மத்திய அரசு ஜனாதிபதியின் தயவை நாடியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-DINAVIDIYAL!