HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 26 April 2012

அணையை தகர்க்க வெடிமருந்தை ரெடியாக வைத்திருக்கும் கேரளா: வைகோ

சென்னை: முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு சதித் திட்டம் தீட்டுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தென் தமிழ்நாட்டில் 2,17,000 ஏக்கர் விவசாயிகளின் பாசனத்திற்கும், 85 லட்சம் மக்களின் குடிநீருக்கும் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணையை எவ்விதத்திலும் உடைத்து விடுவது என்று கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் திட்டமிட்டு பல வழிகளில் முயற்சிகள் நடக்கின்றன.

இந்தப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் 2006ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி தமிழ்நாட்டுக்குச் சட்டப்படியான உரிமையை நிலைநாட்டித் தந்த தீர்ப்பை, குப்பையில் தூக்கி எறிவது போல கேரள அரசு, அக்கிரமமாக நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து அன்றைய அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

மூன்றரை ஆண்டுகள் கேரள அரசு வாய்தா கேட்டு வழக்கை இழுத்தடித்தது. தமிழ்நாட்டுக்கு நீதி உறுதிப்படுத்தப்படும் நிலையைத் தடுப்பதற்காக வழக்கை அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்ற முன்வைத்த கோரிக்கையை எதிர்க்க வேண்டிய கடமையைச் செய்யாமல் கருணாநிதி அரசு இசைவு தந்ததால், தமிழகத்துக்குப் பாதகமான பின்னடைவு ஏற்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு முல்லைப் பெரியாறு அணையின் வலிமையை ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் தலைமையில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்ட அதிகாரக் குழுவை நியமித்தது.

அக்குழுவின் ஏற்பாட்டில் எட்டு வல்லுநர் குழுக்கள் அளித்த அணையின் வலிமை குறித்த 13 அறிக்கைகளை உள்ளடக்கி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் குழு அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. மே 4ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற இருக்கின்றது.

இதற்கு இடையில் அணையின் வலு குறித்து ஆய்வு செய்வதற்கு பிரதான அணையில் நவீன கருவிகளைக் கொண்டு ஏழு துளைகளைக் குடைந்தனர். 130 அடி ஆழம் முதல் மையப்பகுதியில் 190 அடிகள் வரையிலும், ஆறு அங்குல விட்டத்தில் செங்குத்தாக இந்தத் துளைகள் குடையப்பட்டன. ஒரு துளையில் கருவி சிக்கிக் கொண்டதால் அதை வெளியே எடுக்க முடியவில்லை. அதை அப்படியே விட்டுவிட்டார்கள். வெளியில் எடுத்து குழியை மூடவில்லை.

அனைத்துச் சோதனைகளும் முடிந்த பின்னர் துளைகளை மூடுவதற்குத் தமிழகப் பொறியாளர்கள் முயன்றபோது கேரளப் பொறியாளர்களும், அதிகாரிகளும், காவல்துறையினரும் மிரட்டி அச்சுறுத்தித் தடுத்துவிட்டார்கள்.

இந்த ஆழமான துளைகளில் தண்ணீர் தேங்குமானால் அதில் இருந்து தண்ணீர் வடிவதற்கும், பாதிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக, அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் அஞ்சுகிறார்கள்.

அணையைப் பராமரிக்கின்ற முழு உரிமையும், அதிகாரமும், தமிழக அரசுக்குத் தான் உண்டு. நமக்கு உரிமை உள்ள பென்னி குயிக் கட்டிய அணையில், ஆழமான துளையைப் போட்டு அணைக்கட்டின் கலவையை மாதிரி எடுத்த பிறகு துளைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். பிரதான அணையில் ஏழு துளைகளும், பேபி அணையில் ஒரு துளையும் குடையப்பட்டன.

நமக்கு உரிமை உள்ள அணையை உடைப்பதற்கு கேரள அரசு மாநில அரசின் வரவு செலவுத் திட்டத்திலேயே ஐம்பது கோடி ரூபாயை ஒதுக்கியதோடு, புதிய அணை கட்ட 668 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கையையும் நீதிபதி ஆனந்த் குழுவினரிடம் தந்ததோடு, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சலிடமும் ஒப்புதல் பெறக் கொடுத்து உள்ளது.

புதிய அணைக்கான ஆய்வுக்கு அனுமதி கொடுத்ததே மத்திய அரசு தமிழ்நாட்டுக்குச் செய்த பச்சைத் துரோகம் ஆகும். அணையை உடைக்கின்ற நடவடிக்கைகளில், கேரளத்தினர் ஈடுபட்டதால் தான் தமிழகம் கொந்தளித்து எழுந்தது; பொருளாதார முற்றுகைப் போராட்டம் நடந்தது. நரித்தந்திரத்தோடு கேரளம் தற்போது பதுங்கி இருக்கிறது.

அணையை உடைப்பதற்காக வெடிமருந்தையும் கேரளத்தினர் ஆயத்தமாக வைத்து உள்ளனர். நமது அணையில் உள்ள துளைகளை மூடாவிட்டால், சதித்திட்டம் செய்து, இத்துளைகளையே பயன்படுத்தி, கேரளத்தினர் அணையை உடைக்கவும் கூடும்.

அப்படி ஒரு பேராபத்து ஏற்பட்டுவிட்டால் தென்தமிழ்நாடு, தாங்க முடியாத துன்பத்துக்கும் துயரத்துக்கும் உள்ளாக நேரும். பாலை நிலமாகி, பஞ்சமும், பட்டினியும் வாட்டி வதைக்கும் அபாயம் ஏற்படும். வருமுன் காப்பதுதான் அறிவுடைமை ஆகும். எனவே, முல்லைப் பெரியாறு அணையில் குடைந்த துளைகளை உடனடியாக மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதைத் தடுப்பதற்கு முனையும் கேரள அரசை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

-DINAVIDIYAL!