HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Wednesday, 11 April 2012

இலங்கையில் காந்தி சிலை உடைப்பு: இந்தியா கண்டனம் தெரிவிக்காதது வெட்கக்கேடானது- வைகோ

சென்னை:  இலங்கையில் மகாத்மா காந்தியின் சிலை, தமிழ் அறிஞர்கள் சிலைகள் உடைக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஈழத்தமிழ்க் குழந்தைகள், பெண்களை ஈவு இரக்கம் இன்றி வதைத்துக் கொன்று குவித்துக் கோர தாண்டவம் ஆடிய சிங்களப் பேரினவாத அரசும், மிருகங்களை விடக் கொடிய இனவெறியர்களும், தொடர்ந்து தமிழர்களுக்குக் கொடுமைகள் செய்து வருகிறார்கள்.

மகாத்மா காந்தி, உலக சாரணர் இயக்க நிறுவனர் இராபர்ட் பேடன்பாவல், விவேகானந்தர், தமிழ் அறிஞர்கள் விபுலானந்தர், புலவர் மணி பெரியதம்பி பிள்ளை ஆகியோருடைய சிலைகளை உடைத்து நொறுக்கி உள்ளனர். இலங்கையில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் கை, கால்களை உடைத்து நொறுக்குவேன் என்று இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வா பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்.

லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்து மூன்று ஆண்டுகள் கடந்த பின்னரும் அவர்களுடைய வெறி இன்னமும் அடங்கவில்லை; சகிப்புத்தன்மை இம்மி அளவேனும் இல்லை என்பதையே இச்சிலை உடைப்புச் சம்பவங்கள் அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன; சிங்களப் பேரினவாதத்தின் கோர முகம் உலகத்தின் கண்களுக்கு அம்பலமாகிக் கொண்டு இருக்கின்றது.

இப்போது அல்ல 28 ஆண்டுகளுக்கு முன்பே, அவர்கள் இத்தகைய கொடுமைகளைச் செய்தார்கள். 1984ம் ஆண்டு இந்திரா அம்மையார் சுட்டுக்கொல்லப்பட்டபோது, ஈழத்தமிழர்கள் அவரது படத்துடன் இரங்கல் ஊர்வலம் சென்றனர். சிங்கள வெறியர்கள் அந்தப் படத்தைப் பிடுங்கி உடைத்து நொறுக்கியதுடன், ‘இனி உங்களைக் காப்பாத்த உங்க ஆத்தா வருவாளாடா?’ என்றும் கேட்டு வசைமாரி பொழிந்தனர். யாழ்ப்பாணத்தில் எம்.ஜி.ஆர். சிலையை உடைத்தார்கள்.

இத்தகைய கொடுஞ்செயல்களுக்கெல்லாம் மூல காரணமான சிங்கள இனவாத அரசின் சுயரூபத்தை, உண்மைத் தோற்றத்தை, இந்தியாவில் உள்ள மக்கள், அரசியல் கட்சிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்தச் சிலை உடைப்புச் சம்பவங்களுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்காதது, வெட்கக்கேடானது.

மகாத்மா காந்தி சிலையும், தமிழ் அறிஞர்களின் சிலைகளையும் சிங்கள இனவெறியர்களைக் கொண்டு திட்டமிட்டு உடைத்து நொறுக்கிய சிங்கள அரசுக்கு, மதிமுக சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.-DINAVIDIYAL!