HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Wednesday, 11 April 2012

கூடங்குளம் அணு நிலையத்திற்கு இலங்கை எதிர்ப்பு தெரிவிப்பதற்கு கருணாநிதி கண்டனம் “ஏதோ நேற்று தொடங்கியது போன்று கூறுவதை ஏற்கமுடியாது’

சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித்துள்ளதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணு மின் நிலையத்தால் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக இலங்கை அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையம் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மட்டுமன்றி இலங்கைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. எதிர்பாராதவிதமாக அங்கு கதிர்வீச்சு ஏற்பட்டால் அது இலங்கை வரை பாதிப்பை ஏற்படுத்தும். ஏனென்றால் இலங்கையின் மேற்கு கடலோரப் பகுதியில் இருந்து வெறும் 240 கி.மீ.தூரத்தில் தான் கூடங்குளம் அணு மின் நிலையம் அமைந்துள்ளது.
பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் அதிகரித்தால் புயல், பெருமழை போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும். இந்தியாவில் இதுவரை அதிகபட்சமாக 200 மெகாவாட் திறன் கொண்ட அணு உலைகளே அமைக்கப்பட்டன. தற்போது கூடங்குளத்தில் முதன்முறையாக 1000 மெகாவாட் திறன் கொண்ட அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே அந்த அணு உலைகளை நிர்வகிப்பதில் சிறிய தவறு ஏற்பட்டாலும் பெரிய ஆபத்து ஏற்படும் என்று இலங்கை கூறியுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தை சர்வதேச அணு சக்திக் கழகமான (ஐஅஉஅ) வின் பார்வைக்குக் கொண்டு செல்லப் போவதாகவும் இலங்கை கூறியுள்ளது.
கருணாநிதி கண்டனம்:
இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சட்டசபையில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி கூறுகையில், கூடங்களம்அணு மின் நிலைய வேலை ஏதோ நேற்று தொடங்கியது போல இலங்கை அரசு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. அந்தத் திட்டத்தை நேற்று ஆரம்பிக்கவில்லை. நீண்ட காலமாக நடந்து வருகிறது. தற்போது அணு மின் நிலையத்திற்கு திடீரென எதிர்ப்புத் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த விடயத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் கூறமாட்டேன். ஆனால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என்றார்.
-DINAVIDIYAL!