சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த மாணவியின் உடல் இன்று அதிகாலை இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு புது தில்லி இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு தனி விமானம் மூலம் வந்தடைந்தது.
தில்லியைச் சேர்ந்த 23 வயது மாணவி, டிசம்பர் 16ஆம் தேதி இரவு ஓடும் பஸ்ஸில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த மாணவி, தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், மாணவியின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 26ஆம் தேதி இரவு சிங்கப்பூருக்கு ஏர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்குள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார்.
மாணவியின் உடல்நிலையை 8 சிறப்பு மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்தனர். மருத்துவ ஆய்வுக்குப் பிறகு, அவரது மூளையில் காயம் உள்ளதாகவும், வயிற்றிலும், நுரையீரலிலும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது.
""சனிக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 2.15) மாணவியின் உயிர் பிரிந்தது. இதைத்தொடர்ந்து மாணவியின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விமானத்தில் இன்று அதிகாலை மாணவியின் உடல் இந்தியா வந்தடைந்தது. புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் வந்த போது மாணவியின் உடலை பார்க்க பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.-DINAVIDIYAL!