2013–ம் ஆண்டு இறுதிக்குள் மின்பற்றாக்குறை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது கூறியதாவது:–
போராட்டம்
காவிரி, முல்லைப்பெரியாறு, தமிழக மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு விவகாரம்; தமிழகத்திற்கான அரிசி, மண்எண்ணெய், எரிவாயு, கூடுதல் நிதி போன்ற அனைத்து கோரிக்கைகளிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதை மக்கள் நன்கு அறிவார்கள்.
அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை புனரமைத்து; அதன் வழியே தமிழக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் நிறைவான சேனல்களை வழங்கி வருவதைப்போலவே; சென்னை மாநகருக்கும் வழங்குவதற்கு முயற்சிக்கும் நிலையில், தங்களது குடும்ப நிறுவனங்களின் மூலம் தங்களது ஏகோபித்த உரிமையை நிலை நிறுத்திட, மத்திய காங்கிரஸ் அரசை கொண்டு முட்டுக்கட்டை போடுவதையும்; அதனை உடைத்தெறிய நான் போராடி வருவதையும் தமிழக மக்கள் அறிவார்கள்.
நிச்சயம் சரி செய்வேன்
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், அதனை மத்திய அரசு, மத்திய அரசிதழில் வெளியிட முன்வராத சூழ்நிலையில், ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் இதை வெளியிட, தான் தாங்கி இருக்கும் மத்திய அரசை கருணாநிதி வலியுறுத்தாத சூழ்நிலையில்; இறுதித்தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுவதே காவிரியில் நமக்குரிய பங்கை உறுதி செய்யும் என்பதால், நான் அது குறித்து மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். எனினும் மத்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை.இந்நிலையில், எனது ஆணையின் பேரில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதன்மூலம், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையும் தடுக்கும் நோக்கில் மறைமுக வேலைகளை செய்து வருகிறார் கருணாநிதி. இருப்பினும், குடகு விட்டு குதித்து வரும் காவிரியை அடகு வைத்த கருணாநிதியின் வரலாற்றுப்பிழையை நான் நிச்சயம் சரி செய்வேன்.
மின்பற்றாக்குறை
இவ்வளவு சாதனைகளை நாம் நிகழ்த்தி இருந்தாலும், தமிழ்நாட்டு மக்களை பாதிப்படைய செய்துள்ள பிரச்சனை மின்பற்றாக்குறை என்பதை நான் அறிவேன். முந்தைய தி.மு.க. அரசால் ஏற்படுத்தப்பட்ட மின்பற்றாக்குறையினை நீக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் போர்க்கால அடிப்படையில் நான் எடுத்து வருகிறேன்.
மிக விரைவில் தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறை சீர் செய்யப்படும். எனது முந்தைய ஆட்சி காலத்தை போலவே தமிழகத்தை, மிகை மின்உற்பத்தி மாநிலமாய் விரைவில் மாற்றிக்காட்டுவேன். 2013–ம் ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.-DINAVIDIYAL!