HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Friday, 6 September 2013

குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவி இழப்பு: ‘தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியாது’ மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக பதவி இழப்பார்கள் என்று வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியாது என்று கூறி, மத்திய அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை 10–ந் தேதி ஒரு முக்கிய தீர்ப்பை வெளியிட்டது.
http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/SC0409_1.jpgஎம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவி இழப்பு
2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெறத்தக்க குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி. மற்றும் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் உடனடியாக பதவி இழப்பார்கள் என்று தீர்ப்பு அளித்தது.
மேலும், கைதாகி ஜெயிலிலோ அல்லது போலீஸ் கட்டுப்பாட்டிலோ இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தும் உத்தரவிட்டது.
தண்டனை பெற்ற எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் 3 மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்தால், அந்த மனு நிலுவையில் இருக்கும் வரை, பதவியில் நீடிக்கலாம் என்ற மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8(4) செல்லாது என்று நீதிபதிகள் அறிவித்தனர். இந்த சட்டப்பிரிவு அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்டதாக அமைந்து இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.
சட்ட திருத்த மசோதா
இந்த தீர்ப்புக்கு ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நீதித்துறை எல்லை மீறிச்செல்வதாக கூறிய அரசியல் கட்சிகள், பாராளுமன்றமே அதிக அதிகாரம் படைத்தது என்று தெரிவித்தன.
அரசியல் கட்சிகளின் யோசனையின் பேரில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செல்லுபடி ஆகாமல் செய்வதற்காக, மத்திய அரசு பாராளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா கொண்டு வந்து உள்ளது.
மறு ஆய்வு மனுக்கள்
மேலும், குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக பதவி இழப்பார்கள் என்று வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு 2 மறுஆய்வு மனுக்களை தாக்கல் செய்தது.
அந்த மனுக்களில் மத்திய அரசு கூறி இருந்ததாவது:–
தண்டனை பெற்ற எத்தனையோ பேர், மேல்முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். எனவே, உடனடியாக பதவியை பறித்தால், அத்தகைய நபர்கள் தங்கள் பதவியை திரும்பப்பெற முடியாமல் போய்விடும்.
மேலும், உடனடி பதவி பறிப்பால், ஆட்சி கவிழும் சூழ்நிலையும் ஏற்படும். எனவே, பாராளுமன்றம் மற்றும் சட்டசபையை காப்பாற்ற இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு மத்திய அரசு கூறி இருந்தது.
தள்ளுபடி
இந்த மனுக்கள், நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய ‘பெஞ்ச்’ முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டு அறிந்த நீதிபதிகள் மத்திய அரசின் ஒரு மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தனர்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:–
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், அலங்கோலமாக உருவாக்கப்பட்ட சட்டம். அதற்கு நாங்கள் விளக்கம் அளிக்க முற்பட்டால், நாங்கள் எல்லை மீறிச் செல்வதாக பாராளுமன்றம் விமர்சிக்கிறது.
இந்த சட்டத்தில் வெற்றிடம் உள்ளது. அதுபற்றி பாராளுமன்றம் பரிசீலிக்கலாம்.
எங்கள் தீர்ப்பில் எந்த தவறும் இல்லை. அதை பாராளுமன்றமும் ஏற்றுக்கொண்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து உள்ளது. அது, டெல்லி மேல்–சபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
உரிமை
அது நன்கு பரிசீலித்து அளிக்கப்பட்ட தீர்ப்பு. ஒவ்வொருவரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பாராளுமன்றமும் ஏற்றுக்கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே, இந்த மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
பாராளுமன்றம் சட்டம் இயற்றுகிறது. அந்த சட்டத்துக்கு நாங்கள் அளிக்கும் விளக்கம் ஏற்க முடியாததாக இருந்தால், சட்ட திருத்தம் கொண்டுவர பாராளுமன்றத்துக்கு உரிமை இருக்கிறது.
பரிசீலிக்க சம்மதம்
அதே சமயத்தில், கைது செய்யப்பட்டவர்கள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் தீர்ப்புக்கு எதிரான மற்றொரு மறுஆய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறோம். அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய விரும்புகிறோம்.
இந்த விவகாரம் மீதான விசாரணையின்போது, மத்திய அரசு தனது வாதங்களை முன்வைக்காதது ஏன்? இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
தேர்தல் கமிஷனுக்கு நோட்டீசு
குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள், தேர்தலில் போட்டியிட தடை விதிப்பதற்கு எதிரான மறுஆய்வு மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு தேர்தல் கமிஷன், பீகார் மாநில அரசு, மனுதாரரான சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் லில்லி தாமஸ் ஆகியோருக்கு ‘நோட்டீசு’ அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 -DINAVIDIYAL!