சென்னை: இந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நடப்பு ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 9 விழுக்காடு அதிகரித்து 69.60 கோடியாக உயரும் என கார்ட்னர் நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு இறுதியில் இது 63.80 கோடியாக இருந்தது.
செல்போன் சேவை நிறுவனங்கள் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. கிராமங்களில் தனிநபர் செலவிடும் வருவாய் அதிகரித்து வருகிறது. மேலும் செல்போன்கள் விலையும் குறைவாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வியக்கத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது என கார்ட்னர் நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் (நுகர்வோர் தொழில்நுட்பம்) சாலினி வர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த 2008, 2009 மற்றும் 2010 ஆண்டுகளில் ஒரு வாடிக்கையாளர் வாயிலாக ஈட்டப்படும் சராசரி வருவாயில் இரட்டை இலக்க அளவிற்கு சரிவு ஏற்பட்டது. 2011-ஆம் ஆண்டு முதல் இந்த வருவாயில் வளர்ச்சி ஏற்படத் தொடங்கியுள்ளது.
செல்போன் நிறுவன வருவாய்
அடுத்த நான்கு ஆண்டுகளில் செல்போன் சேவை நிறுவனங்களின் மொத்த வருவாய் ரூ.1.50 லட்சம் கோடியாக (3,000 கோடி டாலர்) உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வியக்கத்தக்க வகையில் அதிகரித்து வரும் நிலையிலும், ஒரு வாடிக்கையாளர் வாயிலாக ஈட்டப்படும் சராசரி வருவாய் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போதும், சீனாவுடன் ஒப்பிடும்போதும் நம்நாடு பின்தங்கிய நிலையில் உள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் ஒரு வாடிக்கையாளர் வாயிலாக ஈட்டப்படும் சராசரி ஆண்டு வருவாய் 40 டாலராக (ரூ.2,000) உள்ளது. அதேசமயம் சீனாவில் இது 120 டாலராக உள்ளது. இந்த வருவாயை குறைந்த அளவில் ஈட்டி வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
இந்திய- சீன ஒப்பிடு
இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது செல்போன் இணைப்பு பெற்றவர்கள் எண்ணிக்கை 51 விழுக்காடு. இது சீனாவில் 71 விழுக்காடாக உள்ளது. 2016-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இந்த விகிதம் 72 விழுக்காடாக அதிகரிக்க உள்ள நிலையில் சீனாவில் இது 119 விழுக்காடாக உயரும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள பயன்பாடு குறைவு
மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது நம்நாட்டில் இணையதள பயன்பாடு குறைவாக உள்ளதால், செல்போன் வாயிலான தகவல் பரிமாற்ற வருவாய் சிறப்பான அளவில் உயர்ந்து வருகிறது. 2011 நிலவரப்படி மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது அகண்ட அலைவரிசை இணைப்பு பெற்றவர்கள் எண்ணிக்கை 6 விழுக்காடாகத்தான் உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் சராசரியாக இது 16 விழுக்காடு உள்ளது.
-DINAVIDIYAL!