-DINAVIDIYAL!
ஹனோய்,பிப்ரவரி 25- இன்புளுவன்சா A/H5N1 மற்றும் A/H1N1 ஆகிய இரு பறவைக்காய்ச்சல் நோய்களுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் வியட்னாம் வெற்றி கண்டுள்ளது.
அந்நாட்டின் முன்னணி நோய் தடுப்பு மருந்து மற்றும் உயிரியல் உற்பத்தி நிறுவனமான VABIOTECH அந்த இரு நோய்களுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதுடன் அனைத்துலக சுகாதார தர நிர்ணயத்திற்கும் அனுப்பி வைத்துள்ளது.
பறவைக்காய்ச்சலால் உயிரிழந்த வியட்னாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து அந்நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆய்வு முடுக்கிவிடப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்தது.
அவ்வகையில், தாங்கள் கண்டு பிடித்த தடுப்பு மருந்தை தன்னார்வலர்களுக்கு செலுத்திய போது, அது நோய் எதிர்ப்பாற்றலை துல்லியமாக வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும், தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் மட்டும் தன்னாவலர்கள் லேசான வலியை உணர்ந்ததாகவும், அவர்களின் உயிரியல் மற்றும் இரசாயனக் குறியீடுகள் அனைத்தும் இயல்பாகவே இருந்ததால் வேறெந்த சிகிச்சையும் அவர்களுக்குத் தேவைப்படவில்லை.
7.5 மைக்ரோகிராம் தடுப்பு மருந்தைச் செலுத்துவதன் மூலம், பொதுமக்கள் A/H1N1 வைரஸ் தாக்குதலிலிருந்து முழு பாதுகாப்பைப் பெறுவதாகவும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, குறைந்த செலவில் A/H5N1 மற்றும் A/H1N1 தடுப்பூசியைக் கண்டுபிடித்த VABIOTECH நிறுவனத்தின் வெற்றியை அந்நாட்டின் சுகாதாரத் துறையின் முக்கிய 26 சாதனைகளில் ஒன்றாக வியட்னாமிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இனி, வியட்னாம் வெளிநாட்டு நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை நம்பியிருக்காது. மேலும் வேகமாகப் பரவும் தொற்றுநோய்களை விரைவில் கட்டுப்படுத்தும் வல்லமையையும் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.