மும்பை: இந்திய கிரிக்கெட் அணி எப்பொழுதுமே பலம்வாய்ந்ததாக இருக்கும் என்று நம்பவுதாக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் ராகுல் டிராவிட்(39). கடந்த 9ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 16 ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடிய டிராவிடிற்கு, நேற்றிரவு பிசிசிஐ சார்பில் மும்பையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இவ்விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் செளரவ் கங்குலி, அனில் கும்ப்ளே, தற்போதைய கேப்டன் டோணி, இந்திய தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த், கிரிக்கெட் வீரர்கள் வி.வி.எஸ்.லஷ்மண், ஷேவாக், கம்பீர் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கங்குலி, டிராவிட்டுடன் விளையாடிய தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
ராகுல் டிராவிட் உலக அளவில் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். இந்திய அணிக்கு நான் கேப்டனாக இருந்த போது, டிராவிட் துணை கேப்டனாக இருந்ததை பாக்கியமாக கருதுகிறேன். கடந்த 2001ம் ஆண்டு கொல்கத்தா மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டிராவிட் குவித்த 180 ரன்களை, அவரது சிறந்த இன்னிங்சாகக் கருதுகிறேன். இந்திய அணியை வழி நடத்தி சென்றவர்களில் டிராவிட் பெரிய தூண் போல விளங்கினார் என்றார்.
விழாவில் சகவீரர்களின் பாராட்டை பெற்ற டிராவிட் இறுதியாக பேசினார். அப்போது அவர் தனது பழைய நினைவுகளையும், தற்போதைய இந்திய அணியின் தன்மை குறித்தும் பேசினார்.
விழாவில் அவர் பேசியதாவது,
கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுவதை தொடர்ந்து நடத்தப்படும் எந்த விழாவிலும் நான் அழக் கூடாது என்று தீர்மானித்து இருந்தேன். ஆனால் இன்று அதற்கு பெரும் சோதனை ஏற்பட்டது.
இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசையுடன் மற்ற சிறுவர்களை போல நானும் ஒரு காலத்தில் சுற்றித் திருந்தேன். ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக எனது கனவு நிறைவேறி வந்ததை நினைக்கும்போது அது எனக்கு கிடைத்த பெரும் ஆசீர்வாதமாகக் கருதுகிறேன்.
இந்திய அணிக்காக விளையாடியபோது பல நாடுகளில் உள்ள பிரபல மைதானங்களில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. பல பிரபல வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. கிரிக்கெட் எனது வாழ்க்கையை அனுபவங்களால் நிரப்பி உள்ளது.
நான் விரும்பி விளையாடிய ஒரு போட்டியின் மூலம் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க முடிந்தது. முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் எனக்கு பல நம்ப முடியாத வெற்றிகளும்,
படுதோல்விகளும் கிடைத்துள்ளன. இந்தியாவிற்காக விளையாடியதன் மூலம் நான் எளிமையான நபராக மாறினேன்.
எனது கிரிக்கெட் பயணத்தை திரும்பி பார்த்தால் நான் எவ்வளவு அதிஷ்டசாலி என்பது உங்களுக்கு தெரியும். கிரிக்கெட் கனவை நினைவாக்க பலரது ஆதரவு நமக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் எப்படியோ தகுந்த இடத்தில், தகுந்த நேரத்தில் நான் இருந்தேன் என்று உணருகிறேன். மேலும் என்னைக் கவர்ந்த பல ஹீரோக்கள், நான் மதிக்கும் பிரபலங்கள் பலரின் முன்னால் நிற்க முடிந்தது.
நான் பேசியபோது பலரது பெயர்களை குறிப்பிட மறந்திருக்கலாம். அதனை அவர்கள் மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். எனக்கு சாதனைகள் படைக்கவும், மதிப்பு கிடைக்கவும் உதவிய பலரும் உண்டு. மைதான பணியாளர்கள், ஸ்கோரர்கள், அம்பயர்கள், போட்டிகளை நடத்துபவர்கள் ஆகியோர் எந்த தன்னலமும் இல்லாமல் செயல்பட்டு போட்டியை நடத்தி எங்களை மதிப்பு மிகுந்தவர்களாக மாற்றினர். அவர்கள் இல்லாமல் எனது சதங்களோ, கனவுகளோ நடந்திருக்காது.
துவக்க காலத்தில் கிரிக்கெட்டின் அடிப்படையை கற்று தந்த பயிற்சியாளர் முதல் எனக்கு இருந்த பல பயிற்சியாளர்களின் மூலம் என்னுடைய ஆட்ட திறன் மேம்பட்டது.
எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு தூண்டுதலாக இருந்த மூத்த கிரிக்கெட் வீரர்கள், எனது ரோல் மாடல்கள் உட்பட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய அணியில் எனது சகவீரர்களாக இருந்த அனில் கும்ப்ளே, கங்குலி, லக்ஷ்மண், டோணி ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
டோணியின் தலைமையில் உள்ள இந்திய அணி 2011 உலகக் கோப்பையை கைப்பற்றியதை பெருமையாகக் கருதுகிறேன். எனக்கு 10 வயது இருந்தபோது கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு டோணி தலைமையில் 2011ல் உலக கோப்பை வென்றது மறக்க முடியாதது. டோணி தலைமையிலான இந்திய அணி மேலும் பல சாதனைகளை படைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
-DINAVIDIYAL!