சென்னை: மின்தட்டுப்பாடு விவகாரத்தில் 30 நாட்களில் உரிய முடிவு எடுக்க மின்சார கழகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நூற்பாலைகள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்வெட்டு அமலில் இருப்பதால் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் நூற்பாலைகள் கட்டாயம் வாரத்தில் 2 நாட்கள் மின்சாரம் பயன்படுத்த கூடாது என்றும், அந்த இருநாட்களை மின் விடுமுறை காலமாக அரசு அறிவித்தது.
இந்த விடுமுறை காலங்களில் தனியாரிடம் இருந்து நூற்பாலைகள் மின்சாரம் வாங்க கூடாது என்றும் மின்சாரம் வாரியம் தடை விதித்தது. இதை எதிர்த்து சுமார் 200 நூற்பாலைகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. இந்த வழக்கை நீதிபதி வெங்கட்ராமன் கடந்த 9ம் தேதி விசாரித்து, மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, நூற்பாலைகள் தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கலாம் என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கோரி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பாக வக்கீல்கள் சுந்தரேசன், பாண்டியராஜன் உள்பட பலரும். தமிழகஅரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீடிக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 30 நாட்களுக்குள் உரிய முடிவு எடுத்து அறிவிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார். -DINAVIDIYAL!