-DINAVIDIYAL!
சென்னை: ஐஐடி-களில் மாணவர்களை சேர்ப்பதற்காக நடத்தப்படும் புதிய நுழைவுத் தேர்வில், தங்களின் ஆலோசனையையும் மத்திய அரசு கேட்க வேண்டுமென ஐஐடி-கள் வலியுறுத்துகின்றன.
ஐஐடி-களில் மாணவர்களை சேர்க்க வழக்கமாக நடத்தப்படும் IIT - JEE நுழைவுத் தேர்வுக்கு பதிலாக புதிய வகையிலான நுழைவுத் தேர்வை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக தங்களின் ஆலோசனைகளும் கணக்கில் எடுக்கப்பட வேண்டுமென, கான்பூர் மற்றும் டெல்லி ஐஐடி-களின் செனட் உறுப்பினர்கள் மனிதவள அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும், இந்த விஷயத்தில் ஐஐடி-கள் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டுமென சென்னை-ஐஐடி, பிற ஐஐடி-களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
புதிய நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான மத்திய அரசின் நோக்கத்தை நாங்கள் அறிந்துள்ளோம். ஆனால் அதற்காக, சம்பந்தப்பட்டவர்களிடம் எந்தக் கருத்தையுமே கேட்காமல், இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அவசரம் காட்டுவதை ஏற்க முடியாது என்று ஐஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐஐடி வட்டாரங்கள் மேலும் கூறுவதாவது: புதிய நுழைவுத் தேர்வு தொடர்பாக எங்களிடம் எந்தக் கருத்தும் கேட்கப்படவில்லை. பள்ளி மேல்நிலை படிப்பில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களையும் ஐஐடி சேர்க்கையின்போது கணக்கில் எடுக்க வேண்டுமென இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம் அளித்தப் பரிந்துரை சிறந்தது என்று நாங்கள் உணர்கிறோம்.
அதேநேரத்தில், புதிய நுழைவுத் தேர்வுமுறையை, எந்தவித சாதக-பாதகங்களையும் ஆராயாமல், இந்த 2013ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்த, மனிதவள அமைச்சகம் அவசரம் காட்டுவது ஏனென்று புரியவில்லை. மாற்றங்களை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் அதை சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அவை கூறின.
