அண்ணா பல்கலைக்கழக மாணவன் மணிவண்ணன் அகாலமாக வாழ்க்கையை முடித்துக் கொண்ட செய்தி பலரையும் அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உழைப்பு, தியாகம், பொதுநலம் போன்ற உயர் குணங்களுக்கு உதாரணம் காட்டும் மணிவண்ணனின் வாழ்க்கைப் பயணம் பாதியில் முடிந்தது பரிதாபத்துக்கு உரியது.
குடும்பத்தை பிரிந்து சென்ற தந்தை. கூலி வேலை செய்து குழந்தைகளை காப்பாற்றிய தாய். குழந்தை தொழிலாளியாக செங்கல் சூளையில் சேர்ந்த பையன். கொத்தடிமை மீட்பின்போது புத்திசாலி சிறுவனை அடையாளம் கண்டு சொந்த செலவில் பள்ளியில் படிக்க வைத்த கலெக்டர் அபூர்வா. கல்லூரியில் சேர ஐயாயிரம் ரூபாய்க்கு ஆடைகள் வாங்கி கொடுத்து ஆசி வழங்கிய கலெக்டர் அமுதா. இப்படி பலருடைய மனிதாபிமானத்தால் பல படிகள் ஏறிய இளைஞன் துவண்டு சரிய என்ன காரணம்?
இட்லி விற்றும் சத்துணவு சமைத்தும் சம்பாதித்த தாயின் அரவணைப்பில் வளர்ந்த மடிப்பாக்கம் குப்பத்து சிறுவன் சரத்பாபு பொறியியல் பட்டதாரியாகி பின்னர் தொழிலதிபரானதை போல மணிவண்ணனும் சாதனை படைப்பான், துயர் துடைப்பான் என்று ஏழைத்தாய் கண்ட கனவு கலைந்தது எதனால்? நிராகரிக்கப்பட்ட காதல் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இதுவரை எதிர்கொண்ட ஐந்து செமஸ்டரிலுமாக 26 பாடங்களில் அரியர்ஸ் வைத்திருந்ததால் சோர்ந்து போயிருக்கலாம் என்று ஒரு கருத்து. வயது வித்யாசமும், குடும்ப பின்னணியும் அவனை மற்ற மாணவர்களிடம் மனம்விட்டு பேச விடவில்லை.
பள்ளியில் எல்லா பாடங்களிலும் அதிக மார்க் வாங்கியதால் பேசப்பட்ட மாணவன், கல்லூரியில் தான் எழுதிய கவிதைகளால் மட்டும் பேசப்பட்டது மிகப்பெரிய மாற்றம். அவனது இழப்புகளையும் குறைகளையும் ஈடு செய்ய கவிதை கைகொடுத்திருக்கலாம்.
போதாக்குறைக்கு மது. தாய்ப்பால் வாசம் என்று தலைப்பிட்ட கவிதை தொகுப்பை திட்டமிட்டபடி அடுத்த மாதம் வெளியிட்டு இருந்தால் அதன் மூலம் கிடைத்திருக்கக் கூடிய புகழ் மணிவண்ணனுக்கு புதிய பாதையை காட்டியிருக்கும். கல்லூரி வாழ்க்கை சினிமாவில் வருவதுபோல் சுலபமாக இருப்பதில்லை. பள்ளிகளும் பெற்றோரும் மாணவர்களை அதற்கு தயார் செய்வதும் இல்லை. இது மாறுவதற்கான சூழலும் இல்லை.-DINAVIDIYAL!