HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 29 March 2012

அமெரிக்காவில் முழுமையான முகமாற்று சிகிச்சை

துப்பாக்கி குண்டு முகத்தைத் துளைத்த விபத்து ஒன்றைச் சந்தித்து முகத்தில் மிக அதிகமான சேதங்களைக் கொண்டிருந்த 37வயது அமெரிக்கச் சிப்பாய் ஒருவருக்கு இதுவரை இல்லாத மிகப் பெரிய அளவில் முகமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மேரிலண்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
புதிய முகத்துடன் இனி அந்தச் சிப்பாயால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் என இந்த அறுவை சிகிச்சைக்குத் தலைமையேற்றிருந்த நிபுணர் கூறுகிறார்.
ரிச்சர்ட் லீ நோரிஸ் என்ற இந்தச் சிப்பாய் இந்த பயங்கர விபத்துக்குப் பின்னர் 15 ஆண்டு காலமாக சமூகத்திலிருந்து தானாக ஒதுங்கியே வாழ்ந்துவந்தார்.
குண்டு பாய்ந்து கோரமாகியிருந்த தனது முகத்தை மறைத்திருப்பதற்காக இவர் எந்நேரமும் முகமூடி அணிந்து வந்தார்.


ஆனால் மேரிலண்ட் பல்கலைக்கழம மருத்துவ மையத்தின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவருக்கு ஒரு புதிய முகத்தையே வழங்கியிருக்கிறார்கள்.
முகத்தின் தோற்றம் மட்டுமல்லாது, அவருடைய பல்வரிசை, நாக்கு, தாடை எலும்பு எல்லாமே புதிதுதான்.
36 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சைதான் இதுவரையில் நடந்த முகமாற்று அறுவை சிகிச்சைகளிலேயே மிகவும் பெரியது என அந்நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
முகத்தோற்றத்தை முழுமையாக மாற்றியமைக்கும் இவ்வாறானதொரு அறுவை சிகிச்சை முதல்முதலாக 2005ஆம் ஆண்டு பிரான்சில் செய்யப்பட்டிருந்தது. தனது நாய் தாக்கி முகத்தில் பெரும் சேதங்களை அடைந்திருந்த பெண்ணுக்கு இதில் மாற்று முகம் கிடைத்தது.
மேரிலண்ட் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முகமாற்று அறுவை சிகிச்சைஆராய்ச்சிகள் அமெரிக்க இராணுவம் வழங்கிவரும் நிதியைக் கொண்டு நடத்தப்படுகின்றன.
இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இராணுவப் பணிசெய்யப்போய் காயமடைந்தவர்களுக்கு தங்களால் விரைவில் இப்படியான முகமாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்ய முடியும் என இந்நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த துருப்பினர் சுமார் இருநூறு பேர் இப்படியான முகமாற்று சிகிச்சை தேவைப்படுபவர்களாகத் தெரிவாகக்கூடும் என அமெரிக்க அரசாங்கம் மதிப்பிடுகிறது.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ரிச்சர்ட் லீ நோரிஸ் உடல் நலம் தேறிவருகிறார் என்றும், அவரால் பல் துலக்கவும், முகச் சவரம் செய்துகொள்ளவும் முடிகிறது, அவரால் மீண்டும் வாசனைகளை உணர முடிகிறது என்றும் அவரது மருத்துவர்கள் கூறுகின்றனர். -DINAVIDIYAL!