இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையே காலியில் நடைபெற்றும் வரும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான ஒரு முடிவை நோக்கிச் செல்கிறது.
இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 84 ஓட்டங்களை பெற்றி நிலையில் உள்ளது.
முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ஓட்டங்களை எடுத்திருந்த இலங்கை அணி செவ்வாய்க்கிழமை ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 318 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அணியின் தலைவர் மஹேல ஜயவர்தன 180 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 193 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் சார்பில் இயன் பெல் அதிகபட்சமாக 52 ஓட்டங்களை எடுத்தார். இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கண ஹேரத் ஆறு விக்கெட்டுகளை எடுத்தார்.
இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட்டுகள் மளமளவென சரிய ஆரம்பித்தன. முதல் இன்னிங்ஸில் சதமடித்த அணியின் தலைவர் மஹேல ஜயவர்தன 5 ஓட்டங்களே எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு நாள் ஆட்டமே முடிவடைந்துள்ள நிலையில், போட்டியில் ஒரு உறுதியான முடிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணி 209 ஓட்டங்கள் முன்னணியில் இருந்தாலும் அவர்களது மீதமுள்ள ஐந்து விக்கெடுகளையும் இன்னும் நூறு ஓட்டங்களுக்கும் குறைவாக இங்கிலாந்து அணி வீழ்த்தினால், தம்மால் வெற்றி பெற முடியும் என இங்கிலாந்து நம்புகிறது.
அதே நேரம் மூன்றாம் நாளிலிருந்து ஆடுகளம் மேலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மேலும் உதவினால் ரங்கண ஹேரத்தும், சுரஜ் ரண்டிவும் தமக்கு வெற்றியை பெற்றுத்தர வாய்ப்பு உள்ளது என இலங்கை கருதுகிறது.
-DINAVIDIYAL!