HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Tuesday, 27 March 2012

உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உயர்கல்வித் துறை குறித்து ஆற்றிய உரையில்.
உயர் கல்வியிலும், உயர் ஆராய்ச்சியிலும் முன்னணி மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதே நமது  முதலமைச்சர் அவர்களின் பேரவா. ஏழைகளுக்கும்  உயர் கல்வி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திட, 2011‑2012 ஆம் ஆண்டில் 11 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.  
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் புதிய பொறியியல் கல்லூரி, ஸ்ரீரங்கத்தில் தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய சட்டப் பள்ளி ஆகியவற்றை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  நமது பல்கலைக்கழகங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி அவற்றை நேர்த்திமிகு மையங்களாகவும், ஆராய்ச்சிகளை மேற்கொண்டு புதிய படைப்புகளை படைக்கும் மையங்களாகவும் மாற்றுவதற்கான முயற்சிகள் தொடரும்.  இத்தகைய புதுமைகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபடுவதற்கு, தொழில் துறையினரோடு இணைந்து செயல்பட இப்பல்கலைக்கழகங்கள் ஊக்குவிக்கப்படும்.
திறன் மிக்க மனிதவள மேம்பாட்டில் அனைத்து மாநிலங்களிலும் முன்னணி மாநிலமாக தமிழகத்தை மாற்றிட நமது  முதலமைச்சர்  எடுத்து வரும் முயற்சிகள் பற்றி நீங்கள் அறிவீர்கள்.  அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும், +2 மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்குவதற்கான பெருந்திட்டம் 2011‑2012 ஆம் ஆண்டில் இந்த அரசால் தொடங்கப்பட்டது.
2012‑2013 ஆம் ஆண்டிலும் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த இந்த வரவு‑செலவுத் திட்டத்தில் 1,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  நமது மாநிலத்தில் உள்ள இளைய தலைமுறையினரிடையே தகவல் தொழில்நுட்பத் திறன் வேகமாக வளர்ந்திட அரசின் இம்முயற்சி பெரிதும் உதவும் என நம்புகிறேன்.



-DINAVIDIYAL!