கொழும்பு, மார்ச் 28: இலங்கையில் நிரந்தர அமைதியைக் கொண்டு வருவது தொடர்பாக எந்த நாட்டினரும் அறிவுரை கூற வேண்டாம் என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்ச தெரிவித்துள்ளார்.
கொழும்புவில் புதன்கிழமை 2012 கண்காட்சியைத் தொடங்கி வைத்த ராஜபட்ச, இலங்கையில் மிகப் பெரிய தியாகத்துக்குப் பிறகுதான் அமைதி திரும்பியுள்ளது. நாட்டில் அமைதியை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமாதான முயற்சிகள் மூலம் இலங்கையில் நிரந்தர அமைதி காண அரசு முயற்சித்து வருகிறது. இதை எவ்விதம் நிறைவேற்றுவது என்பது நமக்கே தெரியும். இந்நிலையில் எதைச் செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் அறிவுரை கூறத் தேவையில்லை என்றார்.
கடந்த வாரம் ஜெனீவாவில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் பெரும்பாலான நாடுகள் வாக்களித்தன. இலங்கையில் இனி எத்தகைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் சில பரிந்துரைகளை அளித்திருந்தது. இது குறித்து நேரடியாகக் கருத்து தெரிவிக்காமல், தங்கள் நாட்டுக்கு எதிராக சர்வேதச அளவில் இப்பிரச்னை கொண்டு வரப்பட்டு அதில் வெற்றியும் பெறப்பட்ட அதிருப்தியில் ராஜபட்ச இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
போரில் கிடைத்த படிப்பினை, சமாதான முயற்சி ஆகியவை குறித்து எல்எல்ஆர்சி அளித்த பரிந்துரைகளை இலங்கை அரசு விரைவாக அமல்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கவுன்சில் பரிந்துரைத்திருந்தது.
இந்தப் பரிந்துரையை ஏற்கப் போவதில்லை என்று இலங்கை அரசு வெளிப்படையாக ஏற்கெனவே அறிவித்துவிட்டது.
15 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இலங்கையில் கண்காட்சி நடைபெறுகிறது. 15 ஆண்டுக்கால இடைவெளி ஏன் என்பதற்கு நிச்சயம் விளக்கம் தேவை. பல ஆண்டுகளாக இலங்கையில் வன்முறை நீடித்ததால் இலங்கையில் வர்த்தகம் செய்ய பல நாடுகள் முன்வரவில்லை. இலங்கையில் இருந்த தீவிரவாதக் குழுக்களுக்கு தேவையான நிதிஉதவி அனைத்தும், இலங்கையிலிருந்து வெளியேறி பிற நாடுகளுக்குச் சென்ற தொழில்களால் அந்த நாடுகளிலிருந்து உதவி கிடைத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்காக ராணுவத்துக்கான ஒதுக்கீட்டை இரு மடங்காக உயர்த்தியதன் பலனாக இப்போது அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதாக ராஜபட்ச சுட்டிக் காட்டினார்.
வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழல் இலங்கையில் நிலவுகிறது. மேலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகவும் இது விளங்குகிறது. சர்வதேச ஹோட்டல் நிறுவனம் இலங்கையில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இது தவிர பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக ராஜபட்ச கூறினார்.
அரசியல் காரணங்களுக்காக மாறுபட்ட நிலையை எடுத்துள்ள சர்வதேச சமூகத்தினர் கூட உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த தம்மை பாராட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
-DINAVIDIYAL!