வரும் தீபாவளி பண்டிகையின்போது தனது புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம்.
நம் நாட்டு இருசக்கர வாகன மார்க்கெட்டில் பவர் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பும், தேவையும் அதிகரித்து வருகிறது. எனவே, அனைத்து நிறுவனங்களும் ஸ்கூட்டர் மார்க்கெட்டின் மீது கண் வைத்துள்ளன.
மேலும், ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஜப்பானிய நிறுவனங்களான ஹோண்டா மற்றும் சுஸுகி நிறுவனங்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதற்கடுத்து, டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு வரவேற்பு இருக்கிறது.
இந்த நிலையில், மற்றொரு ஜப்பானிய நிறுவனமான யமஹாவும் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் இறங்குகிறது. கடந்த ஜனவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ரே என்ற பெயரில் தனது புதிய கான்செப்ட் மாடல் ஸ்கூட்டரை யமஹா காட்சிக்கு வைத்திருந்தது.
இந்த நிலையில், இந்த கான்செப்ட் மாடல் ஸ்கூட்டரில் பல மாற்றங்கள் செய்து வரும் தீபாவளியின்போது விற்பனைக்கு கொண்டு வர யமஹா திட்டமிட்டுள்ளது. மேலும், நம் நாட்டு சாலை நிலைகளுக்கு ஏற்ப டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனுடன் புதிய ஸ்கூட்டர் வருகிறது.
யமஹா காட்சிக்கு வைத்திருந்த கான்செப்ட் மாடல் ரே ஸ்கூட்டர் வடிவமைப்பில் ஹோண்டா டியோவை நினைவுபடுத்தினாலும், உற்பத்தி நிலையில் பல்வேறு மாற்றங்கள் பெறும் என்று கூறப்படுவதால் ஒரு புத்தம் புதிய ஸ்கூட்டர் மார்க்கெட்டுக்கு தயாராகி வருகிறது என்று கூறலாம்.
மேலும், ரே என்ற நாமகரணத்தையும் மாற்றி புதிய பெயரில் இந்த ஸ்கூட்டர் 100 முதல் 125 சிசி திறனுக்கு இடையிலான எஞ்சினுடன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. -DINAVIDIYAL!