சென்னை, மார்ச் 23: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடிநாயக்கனூரில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள் உயர் கல்விக்காக நகரங்களை நாடாமல் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கல்வி கற்பதற்கு ஏதுவாக தொழில் நுட்ப கல்லூரிகளை தமிழக அரசு தொடங்கி நடத்தி வருகிறது.
இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அரசு பொறியியல் கல்லூரியை புதிதாகத் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தப் பொறியியல் கல்லூரி போடி வட்டம் மேல் சொக்கநாதபுரத்தில் வரும் கல்வியாண்டு முதல் செயல்படத் தொடங்கும்.
பாடப் பிரிவுகள் என்ன? இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப் பிரிவுகளில் தலா 60 மாணவர்கள் வீதம் மொத்தம் 300 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இந்தக் கல்லூரிக்குத் தேவையான கட்டடங்கள், தேவையான உபகரணங்கள் போன்ற பல்வேறு பணிகளை நிறைவேற்ற ரூ.93.64 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-dina vidiyal .