இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் போஸ்கோ நிறுவன எஃக்குத் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க தேசிய பசுமை நடுவர் மன்றம் மறுத்திருக்கிறது.
சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளிக்கும் வரை, அந்த ஆலைக்கான அனுமதி இடைநிறுத்தி வைக்கப்படும் என்று நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.
தென்கொரிய நிறுவனமான போஸ்கோவுக்கும் ஒடிஸா அரசுக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஆண்டுக்கு 12 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்யப்படும்.
சுற்றுச்சூழல் அனுமதி ஆய்வை மேற்கொள்ளும் குழுவிற்கு மீனா குப்தா என்பவரை தலைவராக நியமித்தது குறித்தும் நடுவர் மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலராக அவர் இருந்தபோது, அத்திட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பதால், அவர் தலைமையிலான குழு அளித்திருக்கும் அனுமதியும் பாரபட்சமானது என்று நடுவர் மன்றம் கூறியுள்ளது.
காலவரையறைக்குள் நிறைவேற்றக்கூடிய வகையில், குறிப்பிட்ட நிபந்தனைகளை போஸ்கோ நிறுவத்துக்கு விதிக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் விதிகளை போஸ்கோ நிறுவனம் முழறையாக கடைபிடிக்கிறதா என்பதைக் கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்றை அமைக்கவும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு பசுமை நடுவர் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றான போஸ்கோ நிறுவனத்தின் இத்திட்டம் பல ஆண்டுகளாக காலதாமதமாகி வருகிறது.
சுற்றுச்சூழலையும், தங்களது வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்று கூறி, இத்திட்டத்துக்கு எதிராக ஒடிஸாவின் பழங்குடி மக்கள் நீண்ட காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இத்திட்டம் சந்தித்து வரும் இடர்பாடுகளை நீக்க உதவுமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தென்கொரியத் தலைவர்கள் வலியுறுத்தியிருந்தார்கள்.
இந்நிலையில், இத்திட்டத்துக்கான அனுமதியை பசுமை நடுவர் மன்றம் இடைநிறுத்தி வைத்துள்ளது குறித்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கருத்துத் தெரிவிக்கும்போது, "தேசிய பசுமை நடுவர் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளபடி, இத்திட்டத்தில் பிரச்சினைகள் இருந்தால், சுற்றுச்சூழல் அமைச்சகம் அதை கவனிக்கும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், அதற்கான நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மையை நிலைநாட்டுவதும் எனது கடமை’’ என்றார் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன்.-DINAVIDIYAL!