பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் தேர்வில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் உள்பட கல்வித்துறையை மேம்படுத்துவதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து சுட்டிக்காட்டுகிறார் கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன்
பள்ளிக் கல்வி மகிழ்ச்சிகரமாக, மாணவர்களுக்கு மன அழுத்தம் கொடுக்காமல் இருக்க வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், கல்வித் துறையே மாணவர்களது பள்ளி வாழ்க்கையை மிகுந்த சுமையாக ஆக்கி வருவது வேடிக்கையிலும் பெரிய வேடிக்கை. தேர்வுகள், கற்று முடிந்த பின்னர் நடத்தப்பட வேண்டிய சடங்கு.மாணவர் கற்றார்களா என்பதை அறிய முயற்சிக்காமலேயே தேர்வுகள் அறிவிக்கப்பட்டும் அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்வதும் நடைபெற்று வருகின்றன. கல்வித் துறையைப் பொருத்தவரையில் தேர்வுகளை நடத்தி மே மாதம் முடிவுகள் அறிவிக்க வேண்டுமென்பதே ஒரே குறி. அதுவே துறையின் வெற்றிச் சாதனையாகக் கருதுகிறது.
தேர்வுகளை நடத்தும் முறையும் மாணவர்களுக்குப் பெரும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. மாணவர்களின் சுய கௌரவத்திற்கு மதிப்பளிக்காமல் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் திருடர்கள் போல நடத்தப்படும் கொடுமை கண்டிக்கத்தக்கது. பத்து, மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை 16 லட்சம் மாணவர்களுக்கு மேல் எழுதுகின்றனர். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் துறை அலுவலர்களும், அப்பள்ளியைச் சாராத ஆசிரியர்களைக் கொண்டு கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். அவ்வாறிருந்தும், அவர்கள் மீதும் நம்பிக்கை இல்லாமல் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. ஒவ்வொரு படையிலும் ஐந்து உறுப்பினர்கள் இருப்பார்கள். பறக்கும் படை ஒவ்வொன்றும் ஒரு விதம். பெரும்பானமையானவை வருமானவரி ஏப்பினைக் கண்டுபிடிக்கச் செல்லும் படையைப் போல் இயங்கும். பறக்கும் படை வந்தாலே மாணவரது கவனம் சிதறிவிடும். ஒரே தேர்விற்கு ஒரு மையத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட படைகளும் வரும். தேர்வு எழுதும் மாணவர்கள் அமைதியாகத் தேர்வை எழுத இயலாத நிலையை இது தோற்றுவிப்பது பொதுவான நிகழ்வு. பறக்கும் படையை எதிர்கொள்வதில் ஊழல் செய்யும் பள்ளிகள் வெகு சாமர்த்தியத்தைக் காட்டுவர். படைக்குப் படை அங்கு இயங்கும். வாசற்கதவைப் பூட்டி வைத்து, படை வரும்போது விசில் அடித்து உஷார்படுத்தி வைப்பார்கள். பிற நாடுகளில் மாணவர்களுக்கு எந்த அழுத்தத்தையும் தராத வகையில் தேர்வுகள் நடத்தும்போது, நாம் ஏன் இவ்வாறு நடத்த வேண்டியுள்ளது என்று சிந்திக்க வேண்டும். தேர்வு முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கவே இத்தகைய நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்று அவை நியாயப்படுத்தப்படுகின்றன. ஏன் முறைகேடுகளில் ஈடுபடுகின்றார்கள் என்று அறிவதே அவற்றைத் தடுக்க உதவும்.
நமது கல்விமுறையே போட்டிமுறையில் அமைந்துள்ளது. முதலில் வரவேண்டிய கட்டாயத்திற்கு மாணவர்கள் உந்தப்படுகின்றனர். தங்களது விருப்பத்தைவிட பெற்றோர்களது கனவுகளுக்கு ஏற்ப பாடங்களைத் தேர்ந்தெடுக்க மாணவர்கள் வற்புறுத்தப்படுகின்றனர். இயற்கைக்கு மாறான கற்றல் சூழ்நிலையில் மாணவர்கள் திணறுகின்றனர். அதனால், மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது. பல முறைகேடுகளுக்கும் நாமே நமக்குப் போட்டுக் கொண்ட சங்கிலியால் என்பதை அறிந்து அதனைத் தகர்த்தெரிய முற்பட வேண்டும். குற்றம் நடைபெற இயலாத சூழலை உருவாக்க வேண்டும்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைந்த பல்கலைக்கழகக் கல்விக் குழு ‘எங்களை ஒரே ஒரு பரிந்துரைதான் அளிக்க வேண்டுமென்று கேட்டால் அது- தேர்வுச் சீர்திருத்தமே‘ என்று கூறியது. கோத்தாரிக் கல்விக் குழு, யஷ்பால் குழு ஆகியவையும் தேர்வுச் சுமையிலிருந்து மாணவர்களை மீட்கப் பரிந்துரைத்த போதிலும் தேர்வுச் சுமை அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. பொதுத் தேர்வை விருப்பத் தேர்வாக ஆக்கவும் தயக்கங்களே அதிகம். தேர்வு தரும் வேதனைகளைப் பற்றி மாணவர்களிடம் கருத்துக் கோருவது பயன்தரும் செயலாக இருக்கும். பள்ளி விலகல், தற்கொலை முயற்சி போன்றவற்றைத் தவிர்க்க இதுபோன்ற நடவடிக்கைகள் உதவும்.
மாணவர்களுக்குத் தரும் அழுத்தத்திற்கு இணையாக ஆசிரியர்களும் உட்படுத்தப்படுகின்றார்கள். கற்றலை உறுதி செய்வதைவிட தேர்வில் தேர்ச்சி காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உந்தப்படுகின்றார்கள். பள்ளிகளில் மனன முறைக் கற்றலைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. பாடங்களை நடத்தாமலே வினா-விடை முறையைப் பின்பற்றுகின்றார்கள். மாணவரது சுய சிந்தனைக்கு இடம் அளிக்காதது மட்டுமின்றி ஆசிரியர்களும் இயந்திரத்தனமாக வகுப்பறையில் கற்பிக்க வேண்டியுள்ளது. அமைச்சர்களும் அதிகாரிகளும் கொடுக்கும் அழுத்தங்களைத் தாங்க இயலாது ஆசிரியர்கள் தவிக்கின்றார்கள். சமீபத்தில் ஓர் ஆசிரியர் அமிலத்தைப் பருகி உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற பரிதாப நிகழ்வும் நடைபெற்றது. கல்வித்துறையே வினா-விடை முறைக்கு அங்கீகாரம் அளித்து வருவது கல்விசார் சிந்தனையில்லாமையைக் காட்டுகின்றது. பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர் வினா-விடை நூல்களை வெளியிடுவது மிகத் தவறான முன்னுதாரணம். அந்த அமைப்பு உருவானதே மாணவர்களது கற்றலில் பெற்றோர்களது பங்கினை உறுதி செய்யவே. ஆனால், கல்விப் பங்களிப்புக்குப் பதிலாக முரண்பட்ட வணிகமயப் பணிகளில் ஈடுபட்டுவருவது கண்டிக்கத்தக்கது.
இந்த ஆண்டு சமச்சீர் கல்விக் குழப்பத்தால் முதல் மூன்று மாதங்களில் கற்பித்தலும் கற்றலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. இரு நூறு நாட்களுக்குத் தயாரிக்கப்பட்ட பாடத் திட்டத்தை 120 நாட்களில் முடிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது கற்றல் பற்றி அறிந்தவர்கள் இயலாத காரியமென்று உணர்வார்கள். நாளை நீட்டுவித்தும், விடுமுறை நாட்களைப் பள்ளி நாட்களாகியும் ஈடுகட்ட முடியுமென்று நினைப்பது அறிவுடைமை ஆகாது. மூளைக்கு ஓய்வு அவசியம். இரு பங்கு உணவு எடுத்துக்கொண்டால் உடல் தேறாது. மாறாக அஜீர்ணம்தான் உண்டாகும். இன்று பள்ளிக் கல்வியில் நடைபெறும் விரைவாகக் கற்பித்தலும் ஒரு வகை அஜீரணத்தைத்தான் உருவாக்கும். ஒரு கருத்தைப் புரிந்துகொள்ள பாடத்திட்டத்தில் பத்து பிரிவேளைகள் ஒதுக்கியிருந்தால் அதனை 5, 6 பிரிவேளைகளில் முடிக்க முற்பட்டால் மாணவர்கள் அதனைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். இந்த அடிப்படை உண்மையை உணராது கல்வித்துறை செயலாற்றுவது வேறு எந்த நாட்டிலும் நடக்காத ஓன்று. அங்கு அவ்வாறு நடத்த அனுமதிக்கவும் கூடாது.
ஆங்கிலேயர் காலம்தொட்டு பள்ளிகளை நடத்துவதில் அரசு ஈடுபட்டதில்லை. ஆசிரியர் கல்விக் கூடங்களோடு இணைந்த பள்ளிகள், இஸ்லாமியப் பெண்களுக்கான பள்ளிகள்...என அன்றைய ஒன்றுபட்ட சென்னை மாநிலத்தில் இருபதுக்கும் குறைவான பள்ளிகளே அரசின்நேரடிப் பொறுப்பில் இருந்தன. மற்றவை எல்லாம் உள்ளாட்சி அமைப்புகளும். அரசு மானியத்துடன் தனியார் அமைப்புகளும் நடத்திவந்தன. இன்று அந்த நிலை மாறி, 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளையும், 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளையும் அரசு தானே நடத்துகிறது. ஒரு காலத்தில், பள்ளிகள் தரமான கல்வியை அளிக்கின்றனவா என்பதைக் கண்காணிப்பதும், நிர்வாகங்களுக்கு மானியம் வழங்குவதுமே அரசின் பொறுப்புகளாக இருந்தன. ஒவ்வொரு தொடக்கப்பள்ளியும் ஓராண்டுக்கு ஒரு முழு ஆய்வுக்கும், மூன்றுக்குக் குறையாத அறிவிக்கப்படாத திடீர் ஆய்வுகளுக்கும் உட்படுத்த வேண்டும் என்று ஆய்வுக் கோவை நிர்ணயித்து இருக்கிறது. தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரது தேர்ச்சியை ஆய்வாளர் நேரடியாக வினாக்கள் தொடுத்து அறிய வேண்டும் என்பது நியதி. அது போலவே, உயர்நிலைப் பள்ளிகளும் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ளத் தேவையான ஆய்வாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக கற்பித்தலில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தாத பள்ளிகள் இருக்கின்றன. இந்த ஆய்வுப் பணியை முழுமூச்சுடன் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.
-DINAVIDIYAL!