HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 29 March 2012

-DINAVIDIYAL!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர் தங்கள் துடுப்பாட்ட வீரர்களை ஓட்டம் எடுக்க விடாமல் வேண்டுமென்றே தடுத்ததால் தான் ஆட்டத்தின் முடிவு மாறி விட்டதாக பங்களாதேஷ் புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பரபரப்பான இறுதிப்போட்டி

டாக்காவில் கடந்த 22ஆம் திகதி நடந்த பரபரப்பு நிறைந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இந்த நிலையில் இந்த போட்டியில் இப்போது புதிய சர்ச்சை உருவாகி உள்ளது. அந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் பங்களாதேஷத்தின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டன. 50-வது ஓவரை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அய்சாஸ் சீமா வீசினார். இதில் முதல் பந்தை சந்தித்த பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர் மக்முதுல்லா வேகமாக ஓடி ஒரு ஓட்டம் எடுத்து விட்டு, 2-வது ஓட்டத்துக்கு திரும்பிய போது களத்தில் நடுவில் நின்ற பாகிஸ்தான் பந்து வீச்சாளர் சீமா மீது மோதி விட்டார். 2-வது ஓட்டத்துக்கு ஓடும் முயற்சியை கைவிட்டார். இதனால் அடுத்த பந்தை பந்து வீச்சாளர் அப்துர் ரகுமான் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது இது பற்றி இருவீரர்களிடமும் நடுவர் ஏதோ பேசினார்.

சீமா மீது குற்றச்சாட்டு

ஆனால், அய்சாஸ் சீமா வேண்டுமென்றே தான் மக்முதுல்லாவை ஓட விடாமல் தடுத்து விட்டதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சங்கம் திடீரென குற்றம் சாட்டியுள்ளது. இது பற்றி பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய செயல்பாட்டு சபை சேர்மன் இனாயத் ஹூசைன் சிராஜ் கூறுகையில், அந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை நாங்கள் திரும்ப திரும்ப போட்டு பார்த்தோம். அய்சாஸ் சீமா அவரை ஓட்டம் எடுக்க ஓட விடாமல் வேண்டுமென்றே மறித்து கொண்டு நிற்பது தெளிவாக தெரிகிறது. இது பற்றி நாங்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) முறைப்படி புகார் செய்தோம். அதன் நகலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும் அனுப்புவோம்' என்றார்.

ஐ.சி.சி. விதிப்படி ஓட்டம் எடுக்க ஓடும் துடுப்பாட்ட வீரரை பீல்டர் வேண்டுமென்றே குறுக்கிட்டு தடுப்பது உறுதி செய்யப்பட்டால், துடுப்பாட்டம் செய்யும் அணிக்கு 5 ஓட்டங்கள் கூடுதலாக வழங்கப்படும். அந்த பந்தும் கணக்கில் கொள்ளப்படாது. அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் அதன் பிறகு 4 ஓட்டங்கள் மட்டுமே வெற்றிக்கு தேவையாக இருந்திருக்கும் என்றும் இனாயத் ஹூசைன் குறிப்பிட்டார்.

தாமதமான நடவடிக்கை

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரி சுப்ஹான் அகமது கூறுகையில், பங்களாதேஷ் இவ்வளவு தாமதமாக இதை சொல்வது ஆச்சரியம் அளிக்கிறது. களத்தில் அப்படி ஏதேனும் தவறு நடந்திருந்தால் நடுவர்கள் அப்போதே தகுந்த நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த விஷயத்தில் பங்களாதேஷ் ஏன் இவ்வளவு தாமதமான நடவடிக்கையில் இறங்குகிறது என்பது தெரியவில்லை. அப்படி அவர்கள் அப்பீல் செய்தால் கூட இரு நாட்டு கிரிக்கெட் வாரிய உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது' என்றார்.

பாதுகாப்பு அச்சம் காரணமாக 2009-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சர்வதேச கிரிக்கெட் அணிகள் சென்று விளையாட மறுத்து வருகின்றன. ஏப்ரல் மாதம் தங்கள் நாட்டுக்கு வந்து 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுமாறு பங்களாதேஷத்திற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது. அது பற்றி இன்னும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் இறுதி முடிவு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







---DINAVIDIYAL