HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 14 April 2012

இரண்டு ஆண்டுகளில் 100 கோடி டாலரை சம்பாதித்துள்ள இன்ஸ்டாகிராம்

சான்பிரான்சிஸ்கோ:அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை, "பேஸ்புக்' நிறுவனம், 100 கோடி டாலர் கொடுத்து வாங்க உள்ளது.புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளம் இன்ஸ்டாகிராம். மொபைல் போனில் எடுக்கப்பட்ட படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இன்ஸ்டாகிராம் சேவையை தற்போது மூன்று கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். பிரபல ஆப்பிள் நிறுவனம், இன்ஸ்டாகிராம் சேவையை கடந்த ஆண்டு தனது ஐபோன் பயன்பாட்டில் இணைத்துக் கொண்டது.

100 கோடி டாலருக்கு விற்பனை:சமூக வலைதளங்களில் முதன்மை பெற்று விளங்கும், "பேஸ்புக்' இன்ஸ்டாகிராமை 100 கோடி டாலர் கொடுத்து வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.கடந்த 2010ம் ஆண்டு, கெவின் சிஸ்ட்ரோம் என்ற இளைஞரால் துவக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் நிறுவனம், 13 ஊழியர்களைக் கொண்டிருந்தது. இன்றும் இதே அளவு ஊழியர்களுடன் செயல்படும் இன்ஸ்டாகிராம், இரண்டு ஆண்டுகளில் 100 கோடி டாலருக்கு விலை போவது, இணையதள வரலாற்றில் கேள்விப்படாத ஒன்று. கூகுள் நிறுவன முன்னாள் ஊழியரான கெவின், ஸ்டேன்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்தவர்.
பேஸ்புக்கை உருவாக்கிய மார்க் ஜுகர்பெர்க் கடந்த 2004ம் ஆண்டு கல்லூரி விடுதியில் தங்கியிருந்த போது விளையாட்டாக ஆரம்பித்தது தான் இந்த சமூக வலைதளம். இன்று பல கோடி பேர், பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர்.

ஜுகர்பெர்க், ஹார்வர்டு பல்கலைக்கழக படிப்பை பாதியில் விட்டவர். ஆனால், கெவின் கடந்த 2006ம் ஆண்டு ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் மேலாண்மை படிப்பை முடித்தவர். மேபீல்டு கல்வி நிறுவனத்தில் ஒன்பது மாத தொழில் பழகுனர் பயிற்சியும் முடித்தவர்.தொழில் பயிற்சி முடித்த கெவின், ஈவான் வில்லியம், ஜேக் டோர்சி, பிஸ்டோன் ஆகியோர் இணைந்து "டிவிட்டர்' இணையதளத்தை துவக்கினர். அதன் பின் கெவின், கூகுள் ஜி-மெயிலில் சிறிது காலம் பணியாற்றினார்.

ஏழாவது மாதத்தில் 2 லட்சம் நுகர்வோர்:பின்னர் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறி மைக்ரீகருடன் இணைந்து, அன்ரீசன் ஹாரோவிட்ஸ் நிறுவனத்திடமிருந்து 5 லட்சம் டாலர் முதலீடு பெற்று இன்ஸ்டாகிராம் சேவையை துவக்கினார். இந்த சேவை துவக்கப்பட்ட ஏழாவது மாதத்திலேயே 2 லட்சம் பேர் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள துவங்கி விட்டனர்.கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் 17 லட்சத்து 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் மூலம் ஒவ்வொரு நாளும் 2 லட்சத்து 90 ஆயிரம் போட்டோக்கள் அப்லோடு செய்யப்பட்டன. இன்ஸ்டாகிராமின் இந்த வளர்ச்சியால் மேலும் இரண்டு நிறுவனங்கள் இதில் 70 லட்சம் டாலரை முதலீடு செய்தன.இன்ஸ்டாகிராமை, பேஸ்புக் வாங்கினால், இதன் சேவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-DINAVIDIYAL!