HAPPY PONGAL WISHES
Wednesday, 4 April 2012
அதிகார அடிமைகள்
‘என்ன நடந்தது என்று விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளேன். இதற்காக ஒரு உயர் அதிகாரி நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் நேரில் ஆய்வு செய்து அரசுக்கு விரைவில் அறிக்கை அளிப்பார். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.’ இந்த 25 வார்த்தைகளை கேட்டிராதவர்கள் இருக்க முடியாது. எரியும் பிரச்னை மீது தண்ணீர் ஊற்றி, மண் அள்ளி போட்டு, அதற்கு மேல் யாரும் கேள்வி கேட்க முடியாமல் போடப்படும் வாய்ப்பூட்டு. காதல் திருமணம் செய்த மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட பஞ்சாப் பெண் அமைச்சர் அங்கே தர்பார் நடத்துகிறார் என்ற செய்திக்கு மூடி போட பஞ்சாப் அரசு இந்த உத்தியை கையாண்டுள்ளது.
ஜாகிர் கவுர் பள்ளியில் கணக்கு டீச்சராக இருந்தவர். சீக்கிய மத தலைமை பீடமான சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தலைவர் டோரா காலமானதும், அதிர்ஷ்ட காற்று ஜாகிர் கவுரை அந்த பதவியில் அமர்த்தியது. அப்போதுதான் 19 வயது மகள் ஹர்பிரீத் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்டார். வேலைக்காரி உதவியுடன் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற டாக்டர் பின்னர் அப்ரூவராகி ஜாகிர் கவுருக்கு எதிராக சாட்சியம் அளித்தார். கட்டாய கரு கலைப்பு, மிரட்டி அடைத்து வைத்தல், கடத்தல், கிரிமினல் சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஜாகிர் கவுருக்கு ஐந்தாண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. கொலை குற்றம் நிரூபணம் ஆகவில்லை.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வரிடம் கடிதம் கொடுத்துவிட்டு பட்டியாலா ஜெயிலுக்கு புறப்பட்டார் ஜாகிர் கவுர். அதிகாரிகள் காலில் விழுந்து ஆசி வாங்கி அழைத்து சென்றனர். கபூர்தலா சிறைக்கு மாற்றினால் நல்லது என்று ஜாகிர் தகவல் அனுப்ப, உடனே அரசு உத்தரவு பறந்தது. சொந்த மாவட்டம். அங்கு வசதியான அறை, நவீன டீவி, டீடிஎச், ஏசி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது செய்தியானது. அதுபற்றி கேட்டதற்கு டிஜிபி சொன்னதுதான் முதல் 6 வரிகள். பணமும் செல்வாக்கும் படைத்தவர்களுக்கு தனியான சட்டங்கள் இருப்பது மாதிரியான தோற்றம் தொடர்ந்து உருவாக்கப்படுகிறது. ஜனநாயகம் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை தகர்த்துவிடும் என்பது கொத்தடிமைகளாக நடமாடும் உயர் அதிகாரிகளுக்கு புரியாதது வெட்கக்கேடு.-DINAVIDIYAL!