ஒரிசா மாநிலத்தில், கடத்தப்பட்ட ஆளுங்கட்சி சட்டசபை உறுப்பினரை மீட்பதற்காக சிறையிலுள்ள மாவோயிஸ்டுகளை விடுவிப்பதற்கு அரசு இணங்கியுள்ளது.
மாவோயிஸ்டுகளின் பிடியிலுள்ள எம்.எல்.ஏ.வையும் இத்தாலிய சுற்றுலாப் பயணியையும் விடுவிப்பதற்காக, மாவோயிஸ்டுகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என 27 பேரை விடுவிப்பதற்கு ஒரிசா மாநில அரசு முன்வந்துள்ளது.
மாநிலத்தின் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஜினா ஹிக்காக்கா கடந்த மாதம் கடத்தப்பட்டார்.
அதற்கு முன்னதாக, இத்தாலியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவரை மாவோயிஸ்டுகள் கடத்தியிருந்தனர்: அவர்களில் ஒருவர் இரண்டு வாரங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இப்போது சிறையிலுள்ள மாவோயிஸ்டுகளை விடுவிக்கத் தயார் என்ற அரசின் அறிவிப்பு வெளியானதன் பின்னர், மாவோயிஸ்டு தலைவர்களிடமிருந்து எவ்வித பதிலும் இதுவரை வரவில்லை.
'சிறையிலுள்ள பழங்குடியினர் 15 பேரையும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 8 பேரையும் விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது' என ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
பிடித்துவைக்கப்பட்டுள்ள இத்தாலியரை விடுவிக்க வேண்டுமானால், மாவோயிஸ்டுகள் விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்த 7 பேரில் 4 பேரை விடுவிப்பதற்கும் அரசாங்கம் முன்வந்துள்ளது.
இந்தியாவின் கிழக்கு மாநிலங்கள் பலவற்றில் மாவோயிஸ்டுகள் வலுவாக நிலைகொண்டுள்ளதாகவும், இந்த நிலைமை நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
கம்யூனிஸ அரசொன்றை நிறுவுவதற்காகவும் பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய கிராமப்புற மக்களின் உரிமைகளுக்காகவும் தாம் போராடுவதாக மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் கூறிவருகின்றனர்.-DINAVIDIYAL!