விருதுநகர்: விருதுநகர் அருகே போஸ்ட் மாஸ்டர் கொலை வழக்கு தொடர்பாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இன்று கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஒன்றியம் பந்தல் குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சாகுல் அமீது, 56; ஒன்றிய தி.மு.க., செயலர். இவருக்கும், சேதுராஜபுரத்தைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி மாரியம்மாளுக்கும், 45, இடையே கள்ளத் தொடர்பு இருந்தது. லட்சுமணன், 50, திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடபுரத்தில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்த போது, இருக்கன்குடி அருகே லட்சுமியாபுரம் ரோட்டில் 2007 அக்., 30ல் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இருக்கன்குடி போலீசார் விசாரித்தனர்.
இக்கொலை தொடர்பாக, எஸ்.பி., சின்னையா டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் மற்றும் தனிப்படை போலீசார், சாகுல் அமீது, மாரியம்மாளை கைது செய்து விசாரித்தனர். இதில், இருவரும் சேர்ந்து லட்சுமணனை அடித்து, சுமோ காரை ஏற்றியும் கொலை செய்தது தெரியவந்தது. சாத்தூர் மாஜிஸ்திரேட் கோட்டில் ஆஜர் செய்யப்பட்ட இருவரையும் 15 நாள் காவலில் வைக்க, நீதிபதி சுபத்ரா உத்தரவிட்டார். சாகுல் அமீது, மதுரை மத்திய சிறையிலும், மாரியம்மாள், திருச்சி மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சாகுல் ஹமீதிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை தொடர்பாக கேள்விப்பட்ட அப்போதைய தி.மு.க., அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், சாகுல் ஹமீதை கடிந்து கொண்டதுடன், தான் பார்த்துக்கொள்வதாக அவரிடம் உறுதியளித்துள்ளார். தற்போது விசாரணை தீவிரமாவதை உணர்ந்த சாத்தூர் ராமச்சந்திரன், முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, சாத்தூர் ராமச்சந்திரனை விசாரிப்பதற்காக இன்று போலீசார் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது அவர் வீட்டில் இல்லாததால், அவரது மகன் ரமேஷை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், குற்றவாளியை காப்பாற்ற முயன்ற குற்றத்திற்காக இன்று மாலை சாத்தூர் ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
-DINAVIDIYAL!