மும்பை: மகாராஷ்ட்டிர மாநிலத்தில் ராணுவ வீரர்களுக்கென கட்டப்பட்ட குடியிருப்பு விவகாரத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணைக்குழு தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கையில் மாநில அரசுக்குரிய நிலம் தான் என்றும் கார்கில் வீரர்களுக்கென ஒதுக்கப்பட்ட ராணுவத்திற்கு சொந்தமான இடம் இல்லை என்றும் கூறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் கொலபா பகுதியில் கடந்த 2004-ம் ஆண்டு கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்கள் குடும்பத்தினர் மற்றும் வீரர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டது . இந்த திட்டத்தில் அரசியல்வாதிகள், ராணுவ அதிகாரிகள் முறைகேடாக ஒதுக்கீடு பெற்றதாக புகார் எழுந்தது. இதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அப்போதைய முதல்வராக இருந்த அசோக்சவான் பதவிவிலகினார். மத்திய அமைச்சர்களான விலாஸ் ராவ் தேஷ்முக், சுஷில்குமார் ஷிண்டே ஆகியோருக்கும் தொடர்பிருந்தததாக கூறப்பட்டது. சி.பி.ஐ., ஒரு பக்கம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக 2 பேர் கொண்ட ஆதர்ஷ் நீதிவிசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணைக்குழு தனது இடைக்கால அறிக்கையினை அமைச்சகத்திடம் இன்று தாக்கல் செய்தது. இதில் இந்த நிலம் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு என ஒதுக்கீடு செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்த நிலம் பாதுகாப்பு துறையினருக்கு சொந்தமானது என்பதற்கும் ஆதாரம் இல்லை என கூறப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அறிக்கை குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனை சட்டபையில் தாக்கல் செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
-DINAVIDIYAL!