HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 14 April 2012

மாநில வருவாய் இழப்பை ஈடுகட்ட வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை: மத்திய விற்பனை வரி குறைப்பு தொடர்பாக மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை மத்திய அரசு தொடர்ந்து ஈடுகட்ட வேண்டும் என 
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் 
கூறியிருப்பதாவது: கடந்த 2010-11 மற்றும் அதற்கு பிந்தைய ஆண்டுகளில் மத்திய விற்பனை வரி விகிதங்கள் குறைப்பு காரணமாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டுவது தொடர்பாக நிலுவையில் உள்ள சில பிரச்னைகளை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். 

மாநில நிதி அமைச்சர்கள் கமிட்டியின் தலைவர், தமிழ்நாடு உள்பட மாநில அரசுகளின் ஆட்சேபணைகளை ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளார். இருப்பினும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நியாயமற்ற நிலையை கடைபிடித்து வருவது துரதிர்ஷ்டவசமானது. 2010-11ம் ஆண்டுக்கான வருவாய் இழப்பை மாநிலங்களுக்கு ஈடுகட்ட மத்திய அரசு ஒப்புக் கொண்டாலும், அந்த ஆண்டுக்கான தகுதியான நஷ்டஈட்டை, மதிப்பு கூட்டப்பட்ட வரி 4 சதவீதத்தில் 
இருந்து 5 சதவீதமாக உயர்த்தியதன் விளைவாக கிடைத்த கூடுதல் வருவாயை கழித்துக் கொண்டு தன்னிச்சையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

மத்திய விற்பனை வரி நஷ்டஈட்டை, மதிப்பு கூட்டு வரி உயர்வால் கிடைக்கும் கூடுதல் தொகையுடன் தொடர்புபடுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மத்திய விற்பனை வரி குறைப்புக்கும், மதிப்பு கூட்டு வரி உயர்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மத்திய விற்பனை வரி இழப்பீட்டுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளில் எந்த இடத்திலும் இவ்வாறு குறிப்பிடப்படவில்லை. இரண்டாவதாக, 2011-12ம் ஆண்டு முதல் மத்திய விற்பனை வரி இழப்பீட்டை நிறுத்திக் கொள்வது என மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவும் ஆட்சேபத்துக்கு உரியதாகும். 

சரக்குகள் மற்றும் சேவைகள் சட்டத்தின் முன்னோட்டமாக மத்திய விற்பனை வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளிடம் கருத்தொற்றுமையை ஏற்படுத்தி, பொருத்தமான நடைமுறையை உருவாக்கிய பிறகு சரக்கு மற்றும் சேவைகள் வரியை அறிமுகப்படுத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. சரக்கு 

மற்றும் சேவை வரி அறிமுகம் தாமதத்தால் ஏற்படும் இழப்பை மாநிலங்கள் சுமக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாது. சரக்கு மற்றும் சேவை வரி 
அறிமுகப்படுத்தப்படும் வரை மாநிலங்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டிய தார்மீக பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது.மத்திய விற்பனை வரி குறைப்பு காரணமாக தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய விற்பனை வரி குறைக்காமல் இருந்தால் கடந்த 2007-08 முதல் 2010-11 வரையிலான காலத்தில் தமிழகத்துக்கு இந்திய அரசின் இழப்பீடு தொகையை காட்டிலும் ரூ.2000 கோடி கூடுதலாக 

கிடைத்திருக்கும். இந்த வருவாய் இழப்பு காரணமாக மாநிலத்தில் வருவாய் தளம் கீழ் மட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆண்டு 
ஒன்றுக்கு ரூ.1500 கோடி முதல் ரூ.2000 கோடி வரையிலான வருவாய் இழப்பு ஏற்படும். 

சரக்கு மற்றும் சேவை வரி விஷயத்தில் மாநிலங்களிடையே கருத்தொற்றுமை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சித்து வரும் வேளையில் இதுபோன்ற தன்னிச்சையான நியாயமற்ற முடிவுகள் இந்திய கூட்டாட்சி தத்துவத்துக்கு நன்மை சேர்க்காது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பின்வரும் பிரச்னைகளில் நேரிடையாக தலையிட்டு தீர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் மத்திய விற்பனை வரி இழப்பீட்டை நிறுத்துவதற்கு சரக்கு மற்றும் சேவை வரியை கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படாததை காரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு கணிசமாக இருப்பதால், சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படும் வரை இழப்பீடு அளிக்க வேண்டும்.  

2010-11ம் ஆண்டுக்கான மத்திய விற்பனை வரி இழப்பீட்டு தொகையுடன் மதிப்பு கூட்டு வரி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டதை 
தொடர்புபடுத்தக் கூடாது. இழப்பீடு தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளில் இதுபற்றி குறிப்பிடவில்லை. மதிப்பு கூட்டு வரி உயர்வுக்கும் மத்திய விற்பனை வரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்த மேலும் காலம் தாமதம் ஆகும் பட்சத்தில் மத்திய விற்பனை வரியை மீண்டும் 4 சதவீதமாக்க வேண்டும். இந்தப் பிரச்னைகளில் அக்கறை செலுத்தி அவற்றை விரைவில் தீர்த்து வைப்பீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-DINAVIDIYAL!