சென்னை: இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
"ஒரே ஒரு தேர்வு தான்: தகுதித் தேர்வு மூலமே, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று சட்டசபையில் அறிவித்தார். ஆசிரியர் தேர்வு முறை கொள்கையில், தமிழக அரசு திடீரென மாற்றம் செய்துள்ளது, தேர்வு எழுத உள்ளவர்களை, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு முன் வரை, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருமே, ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், மற்றொரு போட்டித் தேர்வை நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் என, பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் கூறியிருந்தார்.
கொள்கை மாற்றம் குறித்து, கடந்த 28ம் தேதியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:*கடந்த ஆண்டு நவ., 15ம் தேதியிட்ட அரசாணை குறித்து, தெளிவுரை வழங்கும் வகையில், இந்த அரசாணை வெளியிடப்படுகிறது.
*இதன்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறை கொள்கையை, தமிழக அரசு மாற்றியுள்ளது. இவர்களுக்கான போட்டித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற பெயரில் நடக்கும்.
*பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், இன சுழற்சி முறை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் இருக்கும்.
*இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், மாநில அளவிலான வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலேயே, தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-DINAVIDIYAL!