-DINAVIDIYAL!
வொடாஃபோன் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் பின்னடைவைச் சந்தித்த இந்திய அரசு, வருமான வரிச் சட்டத்தில் முன்தேதியிட்டுத் திருத்தம் கொண்டு வரும் முயற்சி, உலக வர்த்தக அமைப்புக்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
உத்தேச சட்டத் திருத்தத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்புக்கள், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளன.
``வருமான வரிச்சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டால், அது முன் தேதியிட்டு அமல்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. புதிய சட்டத் திருத்தம் வந்தாலும், ஏற்கெனவே இதுதொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்’’ என்று, பிரிட்டன் தொழில் கூட்டமைப்புக்கள் சம்மேளனம், அமெரிக்க சர்வதேச வர்த்தக கவுன்சில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக கவுன்சில் உள்பட பல்வேறு உலக வர்த்தக அமைப்புக்கள் பிரதமருக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.
உலக அளவில், இரண்டரை லட்சம் தொழில் நிறுவனங்களை தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அந்த அமைப்புக்கள் கூறுகின்றன.
இந்தியாவில் செயல்படும் இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களின் தலைமையகங்கள் வெளிநாடுகளில் இருந்தால், அந் நிறுவனங்களின் பங்குகளில் பரிமாற்றம் செய்யப்படும்போது, அதனால், இந்திய நிறுவனங்களின் கட்டுப்பாடுகளில் மாற்றம் இருந்தாலும் அந்தப் பரிமாற்றத்துக்கு இந்திய சட்ட விதிகளின்படி வரி விதிக்க முடியாது என்று வொடாஃபோன் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதாவது, எஸ்ஸார் நிறுவன பங்குகளை வாங்கிய வொடாஃபோன் நிறுவனம், அதை வெளிநாட்டில் செய்திருந்தாலும் இந்திய அரசுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என்று வருமானவரித்துறை பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. அதை எதிர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் உலக வர்த்தக அமைப்புக்கள் அந்தத் தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளன. வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் அரசின் முயற்சி, இந்தியாவில் முதலீடு செய்வதால் ஏற்படும் லாப, நஷ்டம் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் உலக வர்த்தக அமைப்புக்கள் இந்திய அரசுக்கு மிதமான எச்சரிக்கை ஒன்றையும் விடுத்திருக்கின்றன.
இதற்கிடையில், பிரிட்டன் நிதியமைச்சர் ஓஸ்பர்ன், இன்று டெல்லியில் இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து, வொடாஃபோன் வருமான வரி விவகாரம் குறித்து பேச்சு நடத்தியுள்ளார்.
பிரிட்டன் – இந்தியா இடையிலான பொருளாதார மற்றும் நிதித்துறை உறவுகள் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, பிரணாப் முகர்ஜியிடம் ஒஸ்பர்ன் இந்தப் பிரச்சினையை சுட்டிக்காட்டியிருக்கிறார்.