-DINAVIDIYAL!
பர்மாவில் நேற்று ஞாயிறன்று இடைத் தேர்தல்கள் நடந்த 45 தொகுதிகளில் இதுவரை முடிவு அறிவிக்கப்பட்டுள்ள 40 தொகுதிகள் அனைத்திலும் ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த தேர்தல்கள் பர்மாவில் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாவதைக் குறிக்கிறது என தான் நம்புவதாக பர்மாவின் ஜனநாயக ஆதரவுத் தலைவி ஆங் சான் சூ சீ தெரிவித்துள்ளார்.தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாதையில் முன்னேற்றம் காண்பதே தமது நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமாதானத்தையும் செழிப்பையும் கொண்டுவரும் முயற்சியில் தம்மோடு கை கோர்க்க விரும்பும் அனைவரையும் நாங்கள் வரவேற்பதாக அவர் அழைப்பு விடுத்தார்.
தான் போட்டியிட்டத் தொகுதியிலும் சூ சீ வென்றுள்ளார்.
பர்மாவின் ஒதுக்குப்புறமான இராணுவத் தலைநகர் நைபீடாவை ஒட்டி இராணுவ உறுப்பினர்கள் செறிந்து வாழும் தொகுதிகளிலும்கூட சூ சீயின் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அரசியல் சீர்திருத்தம்
ஆசியாவின் ஒடுக்குமுறைமிக்க நாடு ஒன்றில் கடந்த பல மாதங்களாக வரிசையாக நடந்துவரும் அரசியல் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக தற்போது ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணியின் வெற்றி அமைந்துள்ளது என்று கூறலாம்.
இந்த நாட்டின் அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டிருந்தனர், இந்த நாட்டின் கடுமையான தணிக்கை முறைகள் தளர்த்தப்பட்டன, பெயரளவிலாவது சிவிலியன் அரசாங்கம் ஒன்று இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் பல ஆண்டுகளாக தமக்கு எதிராக குரல்கொடுத்து வரும் - ஜனநாயகத்தின் சின்னமாகப் பார்க்கப்படுகின்ற ஆங் சான் சூ சீயுடனும் இராணுவத் தளபதிகள் சமரசத்துக்கு வருகிறார்கள் என்பதை இத்தேர்தல் காட்டுகிறது.
மனமாற்றம்
ஆங் சான் சூ சீ தேர்தலில் பங்கேற்று வெற்றி பெறுவதெல்லாம் நடந்தால்,பர்மா மீதான மேற்குலக தண்டனைத் தடைகள் விலக வழி பிறக்கும் என அரசாங்கத்தில் உள்ள முன்னாள் இராணுவத் தளபதிகள் நம்புகின்றனர்.
பர்மாவின் இராணுவ தளபதிகளுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுகளை முன்னெடுக்க மேற்குலகம் தயாராகிறது என்ற ஒரு நேரத்தில் பர்மீய இராணுவ ஆட்சியாளர்களிடத்தில் தற்போதைய மனமாற்றம் தென்படத் துவங்கியது.
தவிர ஜனநாயகத்துக்கு இடம் தருவதால் பர்மா மீதான தடைகள் விலகும் என்றும், அப்போது பெரும் தொகைகளுக்கான வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் பர்மாவுக்குள் நிறைய பணம் வரும் என்றும் இவர்கள் நம்புகின்றனர்.