இந்தியாவின் பொருளாதார நிலை வீழ்ச்சியைக் காட்டும் போக்கு தென்படுவதாக சர்வதேச ரீதியாக 'கடன்பெறு தகைமையை' தரப்படுத்துகின்ற நிறுவனமொன்று எச்சரித்துள்ளது.
மோசமடைந்துவரும் பட்ஜெட் துண்டுவிழும் தொகையும் சுருங்கிவரும் பொருளாதார வளர்ச்சிக் குறிகாட்டிகளும் இந்த நிலையை ஏற்படுத்தி இருப்பதாக ஸ்டாண்டர்ட் அன்ட் புவர்'ஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
2011-12 நிதியாண்டுக்காக அரசாங்கம் உத்தேசித்திருந்த 7 % பொருளாதார வளர்ச்சி வீதம், அதனை விட குறைவான 5.3 % என்ற அளவிலேயே இருக்க வாய்ப்பிருக்கிறது என்று ஸ்டாண்டர்ட் அன்ட் புவர்'ஸ் குறிப்பிட்டுள்ளது.இந்தியாவால் கடன்பெறு தகைமையை BBB என்ற தரத்திலேயே தக்க வைத்திருக்க முடிந்தாலும், அந்நாட்டின் பொருளாதார புறச்சூழ்நிலையை 'நிலையானது' என்ற தரத்திலிருந்து 'பலவீனமானது' என்ற தரத்திற்கு வீழ்ச்சியடைந்துவிட்டதாக அந்த நிறுவனம் கருதுகிறது.
நிதியமைச்சர் நம்பிக்கை
இதேவேளை, பொருளாதார வளர்ச்சியை 7 வீதமாக பேணமுடியும் என்று நம்புவதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்த புதிய தரப்படுத்தலை இட்டு அச்சப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லையென்றும் நிதியமைச்சர் கூறினார்.
அரசு ஈட்டுகின்ற (கடன்கள் தவிர்ந்த) வரி வருமானத்துக்கும் செலவினத்துக்கும் இடையிலான பற்றாக்குறையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் அது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 % ஆக அமையும் என்றும் பிரணாப் முகர்ஜி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் இந்தியாவின் முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக் குறிகாட்டிகள் தாமதப் போக்கைக் காட்டுவதாகவும் அதன் நடைமுறைக் கணக்கிலும் பற்றாக்குறை அதிகரித்திருப்பதாகவும்ஸ்டாண்டர்ட் அன்ட் புவர்'ஸ் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனாலேயே நீண்டகாலமாக தக்கவைக்கப்பட்டிருந்த இந்தியாவின் பொருளாதார புறச்சூழ்நிலையை 'நிலையானது' என்ற தரத்திலிருந்து 'பலவீனமானது' என்ற தரத்திற்கு மீளவும் வரையறுத்திருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
2011-12 நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 வீதத்துக்கும் குறைவாகச் செல்லும் போக்கை கடந்த பெப்ரவரியில் காட்டியது.
இந்தியாவின் சுரங்கத் தொழில், விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளில் ஏற்பட்ட மந்த நிலையே இந்த புதிய தரப்படுத்தலின் மூலம் பிரதிபலித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அடிக்கடி கொண்டுவரப்பட்ட வட்டி வீத அதிகரிப்புகளே இந்தத் துறைகள் பாதிக்கக் காரணம் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பொருட்களின் விலை அதிகரிப்பை தாமதப் படுத்தும் முயற்சியாக கடந்த 2010 மார்ச்சிலிருந்து 13 தடவைகள் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.-DINAVIDIYAL!