முல்லைப்பெரியாறு அணை வலுவாகவே இருக்கிறது என்றும், அங்கு புதிய அணை வேண்டாம் என்றும் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது.
அந்த அணை வலுவாக உள்ளதா, அப்பகுதியில் புதிய அணை ஒன்று கட்டப்பட வேண்டுமா என்று இந்திய உச்சநீதிமன்றம் இரு கேள்விகளை எழுப்பி அது தொடர்பில் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஒரு வல்லுநர் குழுவை அமைத்து கருத்துக் கேட்டது.
அந்த வல்லுநர் குழுவில் தமிழகத்தின் சார்பில் நீதிபதி ஏ ஆர் லக்ஷ்மணனும், கேரளா சார்பில் நீதிபதி கே டி தாமஸும் உறுப்பினர்களாக இருந்தனர்.
உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அந்தக் குழு பல ஆய்வுகளை மேற்கொண்டு தமது அறிக்கையை ஒரு மூடிய உறையில் புதன்கிழமை(25.4.12) உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களை தற்போது கூற முடியாது என்று அக்குழுவில் தமிழகத்தின் சார்பில் உறுப்பினராக இருந்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ ஆர் லக்ஷ்மணன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
எனினும் தற்போதைய அணை ஸ்திரமாக உள்ளது என்பதிலும் அங்கு புதிய அணை தேவையில்லை என்பதிலும் கருத்தொற்றுமை இருந்தாலும், வேறு சில அம்சங்களில் மாற்றுக் கருத்துக்களும் இருந்தன என்றும் அவர் மேலும் கூறினார்.
முல்லைப்பெரியாறு அணை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் மே மாதம் நான்காம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்றும், அப்போது இந்த வல்லுநர் குழுவின் அறிக்கை இரு மாநிலங்களுக்கும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.-DINAVIDIYAL!