-DINAVIDIYAL!
சென்னை: ஆரம்பித்து ஐந்து நாட்கள்தான் ஆகிறது. அதற்குள்ளாகவே 5வது ஐபிஎல் தொடரின் நாயகர்களாகி விட்டனர் சவுரவ் கங்குலியும், ராகுல் டிராவிடும்.
இருவருமே இந்திய அணியின் ஜாம்பவான்களாக திகழ்ந்தவர்கள். இருவருமே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டனர். கங்குலி, வெற்றிகரமான இந்திய கேப்டனாக கலக்கியவர். ராகுல் டிராவிட் இந்திய அணியின் அசைக்க முடியாத சுவராக இருந்தவர். இந்த இருவரும் தற்போது ஐபிஎல் போட்டிகளில் தங்களது அனுபவ முத்திரையைப் பயன்படுத்தி தத்தமது அணிகளை வெற்றிப் பாதையில் விரட்ட ஆரம்பித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணிக்கு இது முதலாவது ஐபிஎல் தொடராகும். முதல் தொடரிலேயே முத்திரை பதித்து வருகிறது அந்த அணி. சந்தித்த இரண்டு போட்டிகளிலும் அந்த அணி அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஒரு கேப்டனாக கங்குலிக்கும் இது பெருமை அளித்துள்ளது.
அதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக செயல்படும் டிராவிடும், தனது அனுபவத்தை பயன்படுத்தி அணியை வெற்றிப் பாதையில் வீறு கொண்டு நடக்கச் செய்து வருகிறார்.
இருவருமே இதற்கு முன்பு வரை வேறு அணிகளின் கேப்டன்களாக இருந்தவர்கள். கங்குலி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர். ஆனால் அதில் அவரால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. அதேபோல ராகுல் டிராவிடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக முன்பு செயல்பட்டவர்.அப்போது அவராலும் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.
இந்த இருவரும் தற்போது அணிகள் மாறி அசத்தி வருவது அனைவரையும் கவர்ந்துள்ளது. ஷான் வார்ன் தலைமையில் சிறப்பாக செயல்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகியுள்ள டிராவிட், இதுவரை நடந்துள்ள 2 போட்டிகளிலும் தனது அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றுள்ளார். அவரது கேப்டன்ஷிப் திறமையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
அதேபோல கங்குலியின் கேப்டன்ஷிப்பில் அறிமுக அணியான புனே வாரியர்ஸ் அணிக்கும் நல்ல வெளிச்சம் கிடைத்துள்ளது. சந்தித்த 2 போட்டிகளிலும் இந்த அணி நல்ல வெற்றியைப் பெற்று அனைவரையும் அதிர வைத்துள்ளது. குறிப்பாக மும்பையை இந்த அணி வீழ்த்திய விதம் அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளியுள்ளது.
இதில் ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த வெவ்வேறு போட்டிகளில் இந்த இரு அணிகளும் தங்களது எதிர் அணிகளை தலா 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆச்சரியமான ஒரு விஷயம். கிங்ஸ் லெவன் பஞ்சாபை புனே வீழ்த்தியது. அதேபோல ராஜஸ்தான் அணி, கொல்கத்தாவை வீழ்த்தியது. அதற்கு முன்பு ராஜஸ்தான் கிங்ஸ் லெவன் பஞ்சாபையும், புனே அணி மும்பை இந்தியன்ஸையும் தங்களது முதல் போட்டியில் வீழ்த்தியிருந்தன.
டிராவிடும் சரி, கங்குலியும் சரி, இந்திய அணியின் அனைத்து வகையான போட்டிகளிலும் பங்கேற்று தங்களது முத்திரையைப் பதித்த வீரர்கள் ஆவர். இருவருமே கேப்டன்களாக சிறப்பாக செயல்பட்டவர்கள்.
கங்குலி எழுச்சியில் இருந்து கேப்டனாக இருந்தபோது டிராவிட் அணியின் முக்கியத் தூணாக, கங்குலிக்கு உற்ற உதவிக்கரமாக இருந்தவர். கங்குலிக்குப் பின்னர் டிராவிடிடம் கேப்டன் பதவி வந்தது. ஆனால் கங்குலி அளவுக்கு கேப்டனாக பெரிய அளவில் வெற்றியை ஈட்டவில்லை டிராவிட் என்பது உண்மை.
இந்திய அணிக்கு உள்ளூரில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நல்ல வெற்றிகளைத் தேடிக் கொடுத்தவர் கங்குலி. இளைஞர்களை வெகுவாக ஆதரித்தவர். வீரேந்திர ஷேவாக், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், யுவராஜ் சிங் ஆகியோருக்கு முழு ஆதரவாக இருந்து அவர்களை வளர்த்து விட்டவர்.
தற்போதும் கூட புனே அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்களான திண்டா, மனீஷ் பாண்டே, ராபின் உத்தப்பா, ராகுல் சர்மா ஆகியோரை தட்டிக் கொடுத்து சிறப்பாக வேலை வாங்கி வருகிறார். குறிப்பாக திண்டாவுக்கு கங்குலியின் முழு ஆதரவும் கிடைத்துள்ளது. இருவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. திண்டா, 2 போட்டிகளில் பந்து வீசி 5 விக்கெட்களைச் சாய்த்துள்ளார்.
இதேபோலத்தான் ராகுல் டிராவிடும். பேட்டிங்கிலும் ஓரளவு கலக்குகிறார். கேப்டன்ஷிப்பிலும் புகுந்து விளையாடுகிறார்.
முதல் இரு போட்டிகளில் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இவர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் எப்படி செயல்படப் போகிறார்கள். இறுதி வரை தோல்வியே காணாத அணிகளாக இறுதிப் போட்டியில் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.