-DINAVIDIYAL!
மும்பை: ஐபிஎல் 5 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின், தனது கை விரல் காயத்தின் படத்தை ட்விட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். தனது விரலில் ஏற்பட்டுள்ள காயம் இன்னும் குணமாகவில்லை என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 5 தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர். இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை துறந்தார் சச்சின். அதன்பிறகு அவரது வேண்டுகோளுக்கு இணங்கி, அணியின் சுழல்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் 5 தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் போலிஞ்சர் வீசிய 9வது ஓவரின் 5வது பந்து, சச்சினின் கை விரலை பதம் பார்த்தது. இதையடுத்து அப்போட்டியில் 16 ரன்கள் மட்டுமே எடுத்த சச்சின், தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாமல் ஓய்வு பெற்று கொண்டார்.
விரல் காயம் காயம் காரணமாக கடந்த 6ம் தேதி நடைபெற்ற புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் பங்கேற்கவில்லை. சச்சினுக்கு விரலில் தொடர்ந்து வலி இருப்பதால், இன்றைய போட்டியிலும் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நீடிக்கிறது.
இந்த நிலையில் ட்விட்டரில் காயமடைந்த தனது கை விரலின் படத்தை வெளியிட்டுள்ள சச்சின், விரல் காயம் இன்னும் குணமாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.