நியூயார்க், ஏப். 22-
அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்பு மாணவர் ஒருவர் மர்மநபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியரான அவர் யார்? எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர் பெயர் சேஷாத்ரி ராவ் (24) என தெரிய வந்துள்ளது.
இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சுதாகர் ராவ். இவர் கோராபுட் மாவட்டம் ஜாய்பூரில் தங்கி உள்ளார். குடும்பத்தினர் அனைவரும் புவனேசுவரத்தில் உள்ளனர். இவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் இங்கு தங்கி இருந்தார். தனது பள்ளி படிப்பை ஜாய்பூர் மற்றும் கட்டாக்கில் படித்தார். கர்நாடகா மாநிலத்தில் உள்ள தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பி.டெக் படித்தார். பட்ட மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
இவரது படிப்பு 18 மாதங்களாகும். அடுத்த மாதத்துடன் (மே) அவரது படிப்பு முடிய உள்ளது. அதற்குள் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் கொலை செய்யப்பட்ட தகவல் அவரது தந்தைக்கு இ-மெயில் மூலம் தெரிய வந்தது. பாஸ்டன் நகர போலீசார் அந்த தகவலை அனுப்பி இருந்தனர். தனது மகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் சுதாகர்ராவ் மற்றும் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்.