HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Sunday, 22 April 2012

எரிமைலயாக வெடிக்கும் அழகிரி, ஸ்டாலின் மோதல்-தத்தளிக்கும் கருணாநிதி!

சென்னை: மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் இடையிலான பதவிப் போர் பெரும் உச்சத்தை எட்டியுள்ளது. இவர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு இரு தலைக் கொள்ளி எறும்பு போல தத்தளித்து வருகிறார் கருணாநிதி.

எத்தனையோ பெரிய பெரிய எதிரிகளை, சவால்களை, சங்கடங்களை, சஞ்சலங்களை, சலசலப்புகளைப் பார்த்தவர் கருணாநிதி. ஆனால் இன்று அவரது பிள்ளைகள் ரூபத்தில் எழுந்து நிற்கும் சவாலை சந்திக்க முடியாமல், முடிவு காண முடியாமல் பெரும் குழப்பத்திலும், கலக்கத்திலும் இருக்கிறார் கருணாநிதி.

தற்போது இந்தப் பிரச்சினை மேலும் ஒரு புதிய மெருகோடு வெடிக்க ஆரம்பித்துள்ளது. மதுரைக்கு வந்த ஸ்டாலினுக்கு உரிய மரியாதையை அழகிரி ஆதரவாளர்கள் கொடுக்கவில்லை என்பதே புதிய சர்ச்சை. இதுதொடர்பாக அழகிரி ஆதரவாளர்களுக்கு தலைமைக் கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு அழகிரி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் நேற்று திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் பெரும் பிரச்சினை வெடித்ததாக கூறப்படுகிறது. அழகிரி விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலினை சமாதானப்படுத்த கருணாநிதி முயன்றபோதுதான் பிரச்சினை பெரிதாகி விட்டதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில் இன்றுகாலை திடீரென மு.க.அழகிரி சென்னைக்குக் கிளம்பி வந்தார். அவர் கருணாநிதியை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக பேசவுள்ளார்.

2 நாட்கள் சென்னையிலேயே முகாமிட்டிருக்கப் போகும் அவர் இந்த விவகாரத்தில் ஒரு முடிவைத் தெரிந்து கொண்ட பின்னர் டெல்லி புறப்படப் போவதாக கூறப்படுகிறது.

மேலும், தனது மத்திய அமைச்சர் பதவி, தென் மண்டல திமுக அமைப்பாளர் பதவி ஆகியவற்றை ராஜினாமா செய்யப் போவதாக அவர் ஏற்கனவே கருணாநிதியிடம் கூறி விட்டதாகவும் தெரிகிறது. இதனால் அழகிரியை எப்படி கருணாநிதி சமாதானப்படுத்தி அமைதிப்படுத்துவார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி வீட்டுக்குள் நடந்து வரும் இந்த சண்டையால், திமுகவினர் அனைவரும் பெரும் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் உள்ளனர். எதிரிகளுடன்தான் நாம் இத்தனை நாளும் மோதி வந்தோம். ஆனால் இன்று நமக்குள்ளேயே மோதிக் கொண்டிருக்கிறோமே என்று அவர்கள் புலம்புகின்றனர்.

கட்சி நலனை மட்டும் கருத்தில் கொண்டு, கருணாநிதி மிகவும் துணிச்சலோடு, அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சினைக்கு முடிவு வரும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

-DINAVIDIYAL!