HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Sunday, 22 April 2012

சியாச்சினிலிருந்து விலக இந்தியாவும் ஒப்புக் கொண்டால்தான் வெளியேறுவோம்!- சர்தாரி

  லாகூர்: இந்திய- பாகிஸ்தான் எல்லையான இமயமலையின் சியாச்சின் மலைப் பகுதியிலிருந்து இந்தியாவும் படைகளை விலக்கிக் கொள்ள ஒப்புக் கொண்டால் மட்டுமே பாகிஸ்தான் நாட்டு படைகள் வெளியேறும் என்று அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.

சியாச்சின் மலைப்பகுதியில் பனிப்பாறை சரிவு ஏற்பட்டதால் அந்நாட்டு ராணுவ வீரர்கள் 138 பேர் புதையுண்டு போனதைத் தொடர்ந்து சியாச்சினிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ளப்படுவது பற்றி விவாதிக்கப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவ தளபதி கியானிதான் முதலில் இக்கருத்தை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சர்தாரி தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

லாகூர் அருகே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சர்தாரி, சியாச்சின் மலைப் பகுதியில் இருந்து பாகிஸ்தான் மட்டுமே படைகளை விலக்கிக் கொள்ளப் போவதில்லை. இந்தியாவும் அங்கிருந்து வெளியேறுமேயானால் பாகிஸ்தான் படைகளும் தமது ராணுவத்தை விலக்கிக் கொள்ளும் என்றார் அவர்.

அவர் மேலும் பேசியதாவது:

இந்தியாவும் பாகிஸ்தானும் சியாச்சினில் நிலைநிறுத்தப்பட்ட ராணுவ வீரர்களது நிலைமை குறித்து கவலை தெரிவித்து வருகிறது. உலகிலேயே மிகவும் கடினமான போர்முனைப் பகுதி சியாச்சின்தான் என்பதில் இருவேறு கருத்து எதுவும் இல்லை. அந்தப் பகுதியின் மோசமான வானிலை பற்றி நாங்கள் நன்கு அறிவோம். உலகின் வேறு எந்த பகுதியிலும் இப்படி ஒரு வானிலை நிலவாது.

இந்தியாவுடனான விவகாரங்களை பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க பாகிஸ்தான் விரும்புகிறது. அனைத்து விவகாரங்கள் குறித்தும் இந்தியாவுடன் பேச பாகிஸ்தான் விரும்புகிறது என்றார் அவர்.
-DINAVIDIYAL!