HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Wednesday, 11 April 2012

அணு ஆயுதங்கள் வைத்திருப்பதில் இந்தியாவை முந்திய பாக். : ஆய்வறிக்கை தகவல்

வாஷிங்டன்: இந்தியாவை விட அதிக அளவிலான அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிடம் இருப்பதாக சர்வதேச அளவில் வெளியான ஆய்வறிக்கையில் ஒன்றில் தகவல் வெளியாயுள்ளது. அமைதி மற்றும் சுதந்திரத்துக்கான சர்வதேச மகளிர் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளதாகவும் கூறப்பபடுகிறது. இந்த அமைப்பு தாக்கல் செய்துள்ள 150 பக்க அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 

பாகிஸ்தானின் தீவிர முயற்சி

அணு ஆயுத போட்டியில் இந்தியாவை விட பலமான நாடாக திகழ வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஆண்டுக்கு சுமார் 
ரூ. 12,500 கோடி வரை அணு ஆயுத ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் ஆயுத தயாரிப்புக்காக பாகிஸ்தான் செலவிட்டு வருகிறது. அணு ஆயுத தயாரிப்புக்கான புளுட்டோனியத்தை பிரித்தெடுப்பது, அதை சுத்திகரிப்பது, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் குறைந்த தூர, நெடுந்தூர ஏவுகணைகளைத் தயாரிப்பது ஆகிய பணிகளில் பாகிஸ்தான் தீவிரமாக உள்ளது. புளுட்டோனிய தயாரிப்புக்கான ஆராய்ச்சி மையங்களை அதிகளவில் உருவாக்கி வருவதோடு, அதை ஏந்திச் செல்ல திட எரிபொருளால் இயங்கும் ஏவுகணைத் தயாரிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. 

110 அணுகுண்டுகள் வைத்திருக்கும் பாக்.

தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தானிடம் 90 முதல் 110 அணு குண்டுகள் வரை இருக்கலாம். மேலும், அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் அதீத அளவில் சுத்திகரிக்கப்பட்ட யுரேனியம் மட்டும் பாகிஸ்தானிடம் 2,750 கிலோ உள்ளது. இது தவிர ஆண்டுதோறு சுமார் 150 கிலோ அளவுக்கு யுரேனியத்தை பாகிஸ்தான் தயாரித்து வருகிறது. இதுவரை பாகிஸ்தான் 140 கிலோ புளுட்டோனியத்தைத் தயாரித்திருக்கலாம் என்றும் தெரிகிறது. இந்தியா-அமெரிக்கா நெருக்கத்தைக் காரணமாக வைத்து சீனாவின் ராணுவ உதவிகளை பாகிஸ்தான் அதிகமாக பெற ஆரம்பித்துள்ளது. மேலும், வாகனங்களில் ஏற்றிச் சென்று ஏவும் திறன் கொண்ட குறைந்த தூர, நெடுந்தூர ஏவுகணைகளை பாகிஸ்தான் அதிகளவில் உருவாக்கி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அதனிடம் 80 அணு குண்டுகள் வரை இருக்கலாம் என்று தெரிகிறது. அணு குண்டுகளை விமானம், ஏவுகணை தவிர நீர்மூழ்கிகள், கப்பல்களில் இருந்தும் செலுத்தும் திறனை வளர்ப்பதில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.-DINAVIDIYAL!