HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 26 April 2012

ரோகித், ராயுடு அதிரடி ஆட்டம் கடைசி ஓவரில் மும்பை வெற்றி

சண்டிகர் : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.  மொகாலி, பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற கிங்ஸ் லெவன் அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக நிதின் சாய்னி, மன்தீப் சிங் களமிறங்கினர். மன்தீப் 22, சாய்னி 17 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். 

ஷான் மார்ஷ் 17 ரன்னில் வெளியேறினார். பஞ்சாப் அணி 15வது ஓவரில்தான் 100 ரன்னை எட்டியது. இந்த நிலையில் கேப்டன் டேவிட் ஹஸி & மில்லர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு அதிரடியாக ரன் குவித்தது. ஹஸி 30 பந்தில் அரை சதம் விளாசினார். இருவரும் கடைசி 5 ஓவரில் 68 ரன் விளாசினர். பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்தது. ஹஸி 68 ரன் (40 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), மில்லர் 34 ரன் (17 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் ஆர்.பி.சிங், மெக்கே, பிராங்க்ளின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 20 ஓவரில் 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது. பிராங்க்ளின், சச்சின் இருவரும் துரத்தலை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.5 ஓவரில் 52 ரன் சேர்த்தது. பிராங்க்ளின் 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். சச்சின் 34 ரன் (29 பந்து, 4 பவுண்டரி), கார்த்திக், போலார்டு தலா 3 ரன்னில் வெளியேற மும்பை தடுமாறியது. அதிரடியாக விளையாடிய ரோகித் ஷர்மா 50 ரன் (30 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஹர்பஜன் (0) இருவரும் அவானா வீசிய 18வது ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி 2 ஓவரில் மும்பை வெற்றிக்கு 32 ரன் தேவைப்பட்டது. பியுஷ் சாவ்லா வீசிய 19வது ஓவரில் அம்பாட்டி ராயுடு & ராபின் பீட்டர்சன் ஜோடி பவுண்டரியும் சிக்சருமாக விளாசி 27 ரன் சேர்த்தது (4, 4, 6, 1, 6, 6). இதையடுத்து, அசார் முகமது வீசிய கடைசி ஓவரில் 5 ரன் தேவைப்பட்டது. முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே கிடைத்தது. 5வது பந்தில் ராயுடு அமர்க்களமாக பவுண்டரி அடிக்க மும்பை வெற்றியை வசப்படுத்தியது. அந்த அணி 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்தது. ராயுடு 34 ரன் (17 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), பீட்டர்சன் 16 ரன் (7 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் அவானா 3, அசார் முகமது 2, சாவ்லா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ராயுடு ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

-DINAVIDIYAL!