தில்லியில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, உயிருக்கு போராடிய நிலையில் சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மருத்துவ மாணவி சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
தில்லியைச் சேர்ந்த 23 வயது மாணவி, டிசம்பர் 16ஆம் தேதி இரவு ஓடும் பஸ்ஸில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த மாணவி, தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் அவரது குடலின் ஒரு பகுதியை மருத்துவர்கள் நீக்கினர். செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே, பலாத்கார சம்பவத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தில்லியில், குடியரசுத் தலைவர் மாளிகை முன்பும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் வீடு முன்பும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பலாத்காரம் செய்தவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர். போராட்டக்காரர்களை ஒடுக்க போலீஸôர் தடியடி நடத்தினர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், மாணவியின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 26ஆம் தேதி இரவு சிங்கப்பூருக்கு ஏர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்குள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார்.
மாணவியின் உடல்நிலையை 8 சிறப்பு மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்தனர். மருத்துவ ஆய்வுக்குப் பிறகு, அவரது மூளையில் காயம் உள்ளதாகவும், வயிற்றிலும், நுரையீரலிலும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது.
""சனிக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 2.15) மாணவியின் உயிர் பிரிந்தது. துக்ககரமான இந்தத் தருணத்தில் மாணவியின் குடும்பத்தினருக்கும், இந்திய தூதரகத்துக்கும் தேவையான உதவியை செய்யத் தயாராக உள்ளோம்'' என மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் கெல்வின் லோக் தெரிவித்தார்.
மாணவியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் கடுமையாகப் போராடினர். செயற்கை சுவாசம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து மற்றும் நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்ட போதும் பலன் கிடைக்கவில்லை என லோக் தெரிவித்தார்.
இதுகுறித்து, சிங்கப்பூருக்கான இந்திய தூதர் டி.சி.ஏ. ராகவன் கூறுகையில், ""மாணவி இறந்ததை அறிந்து அவரது பெற்றோர் மிகவும் மனவேதனை அடைந்தனர். அதேநேரம், மாணவியின் உயிரைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் உணர்ந்தனர். இறப்புச் சான்றிதழ் உள்பட உயிரிழந்த மாணவியின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மாணவியின் பெற்றோருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். சிங்கப்பூர் அரசு உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
கடந்த 2 நாள்களாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகமும், மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை நிர்வாகமும் அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி'' என்றார் ராகவன்.
தனி விமானத்தில் உடலை கொண்டுவர ஏற்பாடு: சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த மாணவியின் உடலையும், அவரது உறவினர்களையும் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக மத்திய அரசு சார்பில் ஏ-319 ரக ஏர் இந்தியா விமானம் தில்லியிலிருந்து சனிக்கிழமை காலை அனுப்பி வைக்கப்பட்டது.
-DINAVIDIYAL!