சென்னை: தமிழக முன்னேற்றத்தில் பல தடைக்கற்களை ஏற்படுத்திய 2012ம் ஆண்டு முடிவடையும் வேளையில், புத்தொளிக் கதிர்கள் பூத்திடாதா எனும் ஏக்கத்துடன் 2013ம் ஆண்டினை வரவேற்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்..
ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பையொட்டி திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
தமிழக முன்னேற்றத்தில் பல தடைக்கற்களை ஏற்படுத்திய 2012ம் ஆண்டு முடிவடையும் வேளையில், புத்தொளிக் கதிர்கள் பூத்திடாதா எனும் ஏக்கத்துடன் 2013ம் ஆண்டினை வரவேற்கிறேன்.
2012 - சென்னை நீங்கலாகத் தமிழகம் முழுவதும் 18 மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால்; தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுப் பல்லாயிரக்கணக்கான சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன; இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை இழந்து தவிக்கின்றனர்; பொருளாதாரம் சிதைந்து, சீரழிந்துள்ளது; வீடுகளில் இருள் கப்பி அல்லல்படும் தாய்மார்களுடன், பள்ளிக் குழந்தைகள் எல்லாம் தேர்வுக்குக்கூடப் படிக்க முடியாத அவலத்திற்கு ஆட்பட்டுள்ளனர்.
தமிழகத்திற்கு - தமிழக மக்களுக்கு இத்தகைய எண்ணற்ற இன்னல்களை இழைத்த 2012ம் ஆண்டு மறையட்டும்!
"கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்"
எனும் திருக்குறள் கூறுவதுபோல், விளைந்துள்ள கேடுகளை எண்ணிப்பார்த்து வாழ்வின் விடியலுக்கு, தமிழக முன்னேற்றத்திற்கு உதவுவோர் யார் என அடையாளம் காணும் உணர்வினை 2013ம் ஆண்டு தமிழக மக்களிடையே வளர்க்கட்டும் எனக் கூறித் தமிழக மக்களுக்கு உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.நீட்டி அளப்பதோர் கோல்"
-DINAVIDIYAL!