தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் போட்ட திட்டத்தால், ராஜ்யசபா தேர்தலில் ஓட்டுப்போட சென்ற கட்சி எம்.எல்.ஏ.,க்கள், படாத பாடுபட்டனர்.
ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக ஓட்டளிக்க, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை தி.மு.க., இழுக்க கூடும் என்ற தகவல், நேற்று முன்தினம் இரவு, தே.மு.தி.க., தலைமைக்கு கிடைத்தது.உஷார் அடைந்த கட்சி தலைமை, நேற்று காலை, 8:30 மணிக்கே, கட்சி அலுவலகத்திற்கு வருமாறு எம்.எல்.ஏ.,க்களுக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட, 21 எம்.எல்.ஏ.,க்கள், கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களுக்கு, ஓட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட இட்லி, பொங்கல், பூரி, மசால் வடை, காபி ஆகியவை காலை உணவாக வழங்கப்பட்டது.காலை, 9:00 மணிக்கு ஓட்டளிக்க புறப்பட வேண்டும், என கூறியிருந்த நிலையில், 10:30 மணியாகியும் விஜயகாந்த் வரவில்லை. எரிச்சல் அடைந்த எம்.எல்.ஏ.,க்கள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், பேசிக் கொண்டும், நாளிதழ்களை புரட்டி பார்த்து கொண்டும் இருந்தனர்.
சரியாக, 10:30 மணிக்கு விஜயகாந்த் வந்ததும், தலைமை செயலகத்திற்கு புறப்பட்டனர். பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக, 11:15 மணிக்கு, அவர்கள் சென்றுக் கொண்டிருந்த போது, முதல்வர், ஓட்டுப் போட, தலைமை செயலகம் வந்துள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, விஜயகாந்த் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள், சாலையோரம் ஆங்காங்கே கார்களை நிறுத்தினர். முதல்வரை தொடர்ந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப் போடுவதாக தகவல் கிடைத்ததால், சாலையில் நிற்க விருப்பமில்லாமல், எம்.எல்.ஏ.,க்கள் விடுதிக்கு சிலர் சென்று விட்டனர்.
-DINAVIDIYAL!