ஜமைக்கா: முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில், கெய்ல் அதிரடியாக சதம் விளாச, வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய இலங்கை அணி தோல்வியடைந்த
து.
து.
வெஸ்ட் இண்டீசில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடக்கிறது. நேற்று ஜமைக்காவில் நடந்த போட்டியில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டுவைன் பிராவோ, "பவுலிங்' தேர்வு செய்தார்.
ஜெயவர்தனா அரைசதம்:
இலங்கை அணிக்கு அனுபவ ஜெயவர்தனா, தரங்கா சேர்ந்து நல்ல துவக்கம் தந்தனர். இருவரும் பவுண்டரிகளாக விளாச, ஸ்கோர் சீராக உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில், தரங்கா(25) வெளியேறினார். இதற்கு பின் விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. அரைசதம் கடந்த ஜெயவர்தனா(52), சுனில் நரைன் "சுழலில்' சிக்கினார். தொடர்ந்து அசத்திய நரைனிடம் சங்ககராவும்(17) சரணடைந்தார். சண்டிமால்(21), திரிமான்னே(6) நிலைக்கவில்லை. ராம்பால் "வேகத்தில்' குலசேகரா(2), ஹெராத்(4) அவுட்டாகினர். நரைன் பந்தில் ஒரு சிக்சர் அடித்த மலிங்கா(8), அடுத்த பந்தில் வீழ்ந்தார்.
மாத்யூஸ் நம்பிக்கை:
கேப்டனுக்குரிய முறையில் பொறுப்பாக ஆடிய ஏஞ்சலோ மாத்யூஸ் மட்டும் நம்பிக்கை தந்தார். துணிச்சலாக போராடிய இவர், அரைசதம் கடந்தார். இலங்கை அணி 48.3 ஓவரில் 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மாத்யூஸ்(55 ரன், 5 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் நரைன் 4, ராம்பால் 3 விக்கெட் வீழ்த்தினர்.
கெய்ல் சதம்:
எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெய்ல், சார்லஸ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. குலசேகரா, மலிங்கா பந்துவீச்சில் கெய்ல் தலா ஒரு பவுண்டரி அடித்தார். மறுமுனையில் சார்லஸ் ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்தார். குலசேகரா ஓவரில் மீண்டும் தனது அதிரடியை காட்டிய கெய்ல் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தநிலையில், சார்லஸ் (29) ஹெராத் "சுழலில்' சிக்கினார். இம்முறை அஜந்தா மெண்டிஸ் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த கெய்ல், ஒரு நாள் அரங்கில் 21வது சதம் கடந்தார்.
டேரன் பிராவே (27) ரன்-அவுட்டானார். அதிரடியாக விளையாடிய கெய்ல் 109 (7 சிக்சர், 9 பவுண்டரி, ) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின் வந்த போலார்டு "டக்-அவுட்டானார்'. ஜீவன் மெண்டிஸ் ஓவரில் சாமுவேல்ஸ் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி 37.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சாமுவேல்ஸ் (15), டுவைன் பிராவோ (8) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை அணி சார்பில் குலசேகரா, அஜந்தா மெண்டிஸ், ஜீவன் மெண்டிஸ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை வெஸ்ட் இண்டீசின் கெய்ல் வென்றார். -DINAVIDIYAL!