HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 5 September 2013

சமையல் காஸ் சிலிண்டர் பெற "ஆதார்' எண் கட்டாயம்: தமிழகத்தில் அக்., 1 முதல் அமலுக்கு வருகிறது

சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு, நேரடி மானியம் வழங்கும் திட்டம், தமிழகத்தில், அரியலூர் மாவட்டத்தில், அக்., 1
ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டம் அறிமுகமானதும், "மூன்று மாதங்களுக்குள், "ஆதார்' எண் வாங்குபவர்களுக்கு மட்டுமே, சமையல் காஸ் சிலிண்டருக்குரிய, நேரடி மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டம்: சமையல், "காஸ்' சிலிண்டர்களுக்கு நேரடி மானிய வழங்கும் திட்டம், தமிழகத்தில் வரும், அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. துவக்கமாக, தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நவம்பரில், மதுரை, டிசம்பரில், கடலூர் ஜனவரியில் தஞ்சை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் தமிழகத்தில், அமலுக்கு வந்தாலும், மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படும். அவகாசம் அளிக்கப்படும் மூன்று மாதத்திற்குள், சமையல் காஸ் சிலிண்டர் பெறுபவர்கள் அனைவரும், ஆதார் எண்ணை கட்டாயம் வாங்கிவிட வேண்டும்.

சேமிப்பு கணக்கு:

ஆதார் எண்ணை, சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கியில், தங்களது சேமிப்பு கணக்குடன் இணைந்து, சமையல் காஸ் சிலிண்டர் பெறும் டீலரிடம் வழங்க வேண்டும். இதன்பின், சமையல், காஸ் சிலிண்டர்களுக்குரிய நேரடி மானியம், வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதன் காரணமாக, வரும் அக்டோபர் 1ம் தேதி முதல், படிப் படியாக நேரடி மானிய திட்டம் அறிமுகமாகும் மாவட்டங்களில் வசிக்கும், சமையல் காஸ் சிலிண்டர் பெறும் பொதுமக்கள், விரைவாக ஆதார் எண்ணை பெற்று, அதை வங்கி கணக்குடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.நேரடி மானிய திட்டம் அறிமுகமாகும் மாவட்டங்களில் வசிப்பவர்கள், மூன்று மாதத்திற்குள் ஆதார் எண்ணை பெற்று இணைக்க வில்லை என்றால், சந்தை விலையில் மட்டுமே காஸ் சிலிண்டர் பெற முடியும்.உதாரணமாக அரியலூர் மாவட்டத்தில் வசிப்பவர்கள், டிசம்பர் 31ம் தேதிக்குள், ஆதார் எண்ணை பெறவில்லை யென்றால், ஜனவரி 1ம் தேதி முதல் நேரடி மானியத்தை பெற முடியாது. சந்தை விலையில் மட்டுமே வாங்க முடியும்.நேரடி மானிய திட்டம், ஜனவரி 1ம் தேதிக்குள், இந்தியாவில், 289 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுவிடும். இதன் மூலம், 14 கோடி சமையல் காஸ் சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்கள் நேரடி மானிய திட்டத்தின் கீழ் வந்துவிடுவர். இவர்களுக்கு, நேரடி மானியமாக, ஆண்டுக்கு, 27 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முரண்பாடு:

கடந்த சில வாரங்களுக்கு முன் ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த, மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் ராஜிவ் சுக்லா "சமையல் காஸ் உள்ளிட்ட, அரசின் மானியங்களை பெறுவதற்கு, "ஆதார்' அடையாள அட்டை அவசியமில்லை' என, குறிப்பிட்டு இருந்தார். தற்போது, அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "ஆதார்' எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது, பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திஉள்ளது.
DINAVIDIYAL!