இந்தியாவால் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைக்கு 1.65 கோடி ரூபா நஷ்டம்?
இந்திய அணியின் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் உள்ளிட்ட தொடர்களில் ஆட்டங்கள் குறைக்கப்பட்டால், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைக்கு 1.65 கோடி ரூபா நஷ்டம் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய அணி எதிர்வரும் நவம்பர் முதல் ஜனவரி வரை தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 7 ஒருநாள் மற்றும் இரண்டு இருபது 20 போட்டிகள் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், இது குறித்து பிசிசிஐ எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் (எதிர்வரும் நவம்பர்) மற்றும் நியூஸிலாந்து (ஜனவரி-2014) தொடர்கள் குறித்து அறிவிக்கப்பட்டன. ஆனால், தென்னாபிரிக்கத் தொடர் குறித்து எந்த முடிவும் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. இதனால், தென்னாபிரிக்க தொடர் நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால், தென்னாபிரிக்கத் தொடரில் 3 ஒருநாள்; 2 டெஸ்ட்; 2 இருபது-20 போட்டிகளை நடத்த வேண்டும் என்று பிசிசிஐ விரும்புவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு போட்டிகள் குறைக்கப்பட்டால் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைக்கு 1.65 கோடி ரூபா இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.